Asianet News TamilAsianet News Tamil

கேமரூன் க்ரீன், டிம் டேவிட் அதிரடி அரைசதம்.! 3வது டி20யில் இந்திய அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா

இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, கேமரூன் க்ரீன் மற்றும் டிம் டேவிட்டின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 186 ரன்களை குவித்து 187 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்துள்ளது. 
 

cameron green and tim david fifties help australia to set 187 runs target to india in third t20
Author
First Published Sep 25, 2022, 8:56 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றநிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. 

ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வுசெய்தார். இந்திய அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இதையும் படிங்க - இதெல்லாம் ஒரு மேட்டரா தல? ரசிகர்களை ஆசை காட்டி மோசம் செய்த தோனி! ஃபாலோயர்ஸை பணமாக மாற்றும் தோனி

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), கேமரூன் க்ரீன், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டேனியல் சாம்ஸ், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு கேமரூன் க்ரீன் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். புவனேஷ்வர் குமார், பும்ரா, அக்ஸர் படேல் ஆகியோரின் பவுலிங்கை பவர்ப்ளேயில் அடித்து நொறுக்கிய கேமரூன் க்ரீன் 19 பந்தில் அரைசதம் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேமரூன் க்ரீன் 21 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 52 ரன்களை விளாசி புவனேஷ்வர் குமாரின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். 

கேமரூன் க்ரீனின் அதிரடியான பேட்டிங்கால்  ஆஸ்திரேலிய அணி பவர்ப்ளேயில் 66 ரன்களை குவித்தது. ஆனால் மிடில் ஓவர்களில் யுஸ்வேந்திர சாஹல், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் ஆகியோர் கட்டுக்கோப்புடன் வீச ரன்வேகம் குறைந்ததுடன் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளும் விழுந்தன.

ஸ்மித் (9), மேக்ஸ்வெல்(6), மேத்யூ வேட்(1) ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, ஜோஷ் இங்லிஸ் ஓரளவிற்கு நன்றாக ஆடி 24 ரன்கள் பங்களிப்பு செய்தார்.  டிம் டேவிட்  டெத் ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் ஆடி 25 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டிம் டேவிட்டின் முதல் அரைசதம் இது. டேனியல் சாம்ஸும் 20 பந்தில் 28 ரன்கள் அடித்தார்.

இதையும் படிங்க - T20 World Cup:ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் யாருக்கு இடம்? கவாஸ்கர் - ஹைடன் முரண்பட்ட கருத்து

கேமரூன் க்ரீனின் அதிரடியான தொடக்கம் மற்றும் டிம் டேவிட்டின் அதிரடியான ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 186 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 187 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios