இந்திய அணியின் ஜெர்சிக்கு புதிய ஸ்பான்ஸர் உறுதியாகிவிட்டது. 

இந்திய அணியின் ஜெர்சிக்கு நீண்டகால ஸ்பான்ஸராக இருந்தது சஹாரா. அதன்பின்னர் 2017 மார்ச் வரை ஸ்டார் நிறுவனம் ஸ்பான்ஸராக இருந்தது. 2017 மார்ச்சில் ஸ்டாரிடமிருந்து சீன மொபைல் நிறுவனமான ஓப்போ ஜெர்சி ஸ்பான்ஸர்ஷிப்பை கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் ஓப்போ நிறுவனம் ஸ்பான்ஷர்ஷிப்பில் இருந்து விலகுகிறது. இதையடுத்து செம்டம்பரில் இருந்து பைஜூஸ் கற்றல் செயலி நிறுவனம் ஸ்பான்ஸர்ஷிப்பை கைப்பற்றியுள்ளது. 2022ம் ஆண்டு வரை பைஜூஸ் ஸ்பான்ஸராக இருக்கும். 

ஓப்போ நிறுவனம் ஸ்பான்ஸராக இருக்கும்போது ஒவ்வொரு போட்டிக்கும் பிசிசிஐக்கு ரூ.4.61 கோடியை வழங்கிவந்தது. ஐசிசி தொடர் மற்றும் ஆசிய கோப்பை ஆகிய தொடர்களில் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.1.56 கோடியை பிசிசிஐக்கு வழங்கிவந்தது குறிப்பிடத்தக்கது.