சிறந்த பேட்டிங் அணியாக மட்டுமே அறியப்பட்ட இந்திய அணி, பும்ராவின் வருகைக்கு பிறகு மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மா, பும்ரா, ஷமி ஆகியோரும் அசத்திவருகின்றனர்.

டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அசத்துகிறார் பும்ரா. இந்திய அணிக்கு கிடைத்த வரப்பிரசாதமாக திகழ்கிறார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் அடித்துள்ளது. இந்த 8 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகள் இஷாந்த் சர்மாவை வீழ்த்தியவை. ஷமி, பும்ரா, ஜடேஜா ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

டேரன் பிராவோவின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். இதன்மூலம் விரைவில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். 11 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன்னர் வெங்கடேஷ் பிரசாத்தும், முகமது ஷமியும் 13 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. 

அதேபோல குறைந்த பந்துகள் வீசி 50 விக்கெட்டுகள் வீழ்த்தியதும் பும்ரா தான். 2465 பந்துகள் வீசி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் 2597 பந்துகளில் முதல் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வினின் சாதனையை முறியடித்துள்ளார் பும்ரா. அஷ்வினுக்கு அடுத்த இடங்களில் கர்சான் காவ்ரி(2606 பந்துகள்), உமேஷ் யாதவ்(2694 பந்துகள்), முகமது ஷமி(2753 பந்துகள்) ஆகியோர் உள்ளனர்.