இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஹனுமா விஹாரியின் அபார சதம் மற்றும் விராட் கோலி, மயன்க் அகர்வால், இஷாந்த் சர்மா ஆகியோரின் பொறுப்பான அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட்  இண்டீஸ் அணி, இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்து, மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பாகவே, 117 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

299 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் அடித்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்திய அணி மொத்தமாக 467 ரன்கள் முன்னிலை பெற்றதால் 468 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் அடித்துள்ளது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா. அதில் ஹாட்ரிக்கும் அடங்கும். இன்னிங்ஸின் 9வது ஓவரை வீசிய பும்ரா, டேரன் பிராவோ, ப்ரூக்ஸ் மற்றும் சேஸ் ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய பவுலர் என்ற பெருமையை பெற்றார் பும்ரா. ஹாட்ரிக் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் ஹர்பஜன் சிங். அவருக்கு அடுத்து ஹாட்ரிக் வீழ்த்தியது இர்ஃபான் பதான். இவர்கள் வரிசையில் பும்ராவும் இணைந்தார். 

இந்த ஹாட்ரிக்கின் கடைசி விக்கெட்டாக விழுந்தவர் சேஸ். சேஸின் கால்காப்பில் பந்து பட்டபோதும், அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இதற்கு கேப்டன் கோலி மற்றும் மற்ற வீரர்கள் அப்பீல் செய்தபோதிலும் பும்ரா பெரிதாக அப்பீல் செய்யவில்லை. ஆனால் அம்பயர் அவுட் கொடுக்காததை கண்ட கேப்டன் கோலி, சற்றும் யோசிக்காமல் உறுதியுடன் உடனடியாக ரிவியூ எடுத்துவிட்டார். ரிவியூவில் அவுட் என்பது உறுதியானது. 

இந்நிலையில், தனது ஹாட்ரிக் குறித்து பேசிய பும்ரா, எனது ஹாட்ரிக்கிற்கு கோலி தான் காரணம். சேஸின் பேட்டில் பட்டுத்தான் பந்து கால்காப்பில் பட்டது என்றுதான் நான் நினைத்தேன். அதனால்தான் நான் அப்பீல் செய்யவில்லை. ஆனால் கோலி, பந்து ஸ்டம்புக்கு நேராகத்தானே சென்றது என்று கேட்டார். ஆம் என்றேன். உடனடியாக ரிவியூ எடுத்துவிட்டார். நான் பந்து பேட்டில் பட்டபின்னர் தான் கால்காப்பில் பட்டதாகத்தான் நினைத்தேன். எனது ஹாட்ரிக்கிற்கு கோலி தான் காரணம் என்றார்.