டி20 உலக கோப்பை இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அக்டோபர் 18ம் தேதி தொடங்கி நவம்பர் 15ம் தேதி வரை உலக கோப்பை போட்டிகள் நடக்கின்றன. 

டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மிகவும் வலுவான அணிகளாக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக திகழ்கின்றன. நடப்பு டி20 சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியும் பொல்லார்டு தலைமையில் புத்துயிர் பெற்றுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். ஏனெனில் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் மிகவும் வலுவான அணி. அந்தவகையில், அந்த அணிக்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. 

இந்நிலையில், டி20 உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரயன் லாரா, டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இந்திய அணியும் ஒன்று. இந்திய அணி ஆடும் அனைத்து தொடர்களையும் வெல்ல தகுதியுள்ள அணி. காலிறுதி, அரையிறுதி அல்லது இறுதி போட்டி என முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணியை எதிர்கொண்டே தீர வேண்டும் என்ற எதார்த்தத்தை எதிரணிகள் உணர்ந்துள்ளன என்று லாரா தெரிவித்துள்ளார்.