ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா. சச்சின் டெண்டுல்கருக்கு நிகராகக்கூட இல்லாமல், சச்சின் டெண்டுல்கரை விட டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார் பிரயன் லாரா. 

இடது கை பேட்ஸ்மேனான பிரயன் லாரா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 131 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்களையும் 299 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10,405 ரன்களையும் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அவர் அடித்த 400 ரன்கள் என்ற சாதனையை தற்போதுவரை யாரும் முறியடிக்கவில்லை. 

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், மெக்ராத், ஆலன் டொனால்டு, ஷான் போலாக், ஷோயப் அக்தர், பிரெட் லீ, முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், சமிந்தா வாஸ் என தனது கெரியரில் பல சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு திறம்பட ஆடி ரன்களை குவித்தவர் பிரயன் லாரா. உலகின் டாப் பவுலர்களையெல்லாம் தனது அபாரமான பேட்டிங்கால் தெறிக்கவிட்ட பிரயன் லாரா, தனது கெரியரில் தான் எதிர்கொண்டதிலேயே மிகச்சிறந்த ஐந்து பவுலர்கள் யார் யார் என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் ஸ்விங் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான்கள் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஆஸ்திரேலியாவின் மிரட்டல் ஜோடி ஷேன் வார்ன், க்ளென் மெக்ராத் மற்றும் இலங்கையின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஆகிய ஐவரும் தான், தான் எதிர்கொண்டதிலேயே மிகச்சிறந்த பவுலர்கள் என்று பிரயன் லாரா தெரிவித்துள்ளார்.