ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி தலைசிறந்த வீரராக திகழும் ரோஹித் சர்மாவிற்கு, டெஸ்ட் அணியில் மட்டும் நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்துவந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ரோஹித் சர்மா, அடுத்த சில மாதங்களுக்கு டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார். 

ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் இறங்கியபோது படுமோசமாக சொதப்பினார். ரோஹித்தை முன்னாள் கேப்டன் தோனி தான் ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக இறக்கிவிட்டார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ரோஹித் சர்மா அபாரமாக ஆடி தனது திறமையை நிரூபித்தார். ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கியதுதான் அவரது கெரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை விளாசி அசத்தினார். 

டி20 கிரிக்கெட்டிலும் 4 சதங்களை விளாசியுள்ளார். ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே வீழ்த்தினால் தான் உண்டு. அவர் கவனமாக ஆடி களத்தில் நிலைத்துவிட்டால், அதன்பின்னர் அவரை அவுட்டாக்குவது கடினம். களத்தில் நிலைத்து நின்றுவிட்டார் என்றால், அதன்பின்னர் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடிவிடுவார். அதுதான் அவரது மிகப்பெரிய பலம். அதனால் தான் அவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை விளாச முடிந்தது.

ரோஹித் சர்மா மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தும்கூட, டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க நீண்டகாலம் ஆகிவிட்டது. ஆனால் தற்போது தனக்கான இடத்தை பிடித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ரோஹித் சரியான நேரத்தில்தான் தொடக்க வீரராக இறக்கப்பட்டுள்ளார். எடுத்த எடுப்பிலேயே வெளிநாடுகளில் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டிருந்தால் சற்று கடினமாக இருந்திருக்கும். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சொந்த மண்ணில் நமது கண்டிஷனில் தொடக்க வீரராக இறக்கப்பட்டது, அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. அடுத்த தொடரும் இந்தியாவில்தான்.. அதுவும் வங்கதேசத்துக்கு எதிராக என்பதால் ரோஹித் கண்டிப்பாக அந்த தொடரிலும் அசத்திவிடுவார். 

எனவே அவருக்கான இடம் உறுதியாகிவிட்டது. இந்நிலையில், ரோஹித் சர்மா குறித்து பேசிய பிரயன் லாரா, ரோஹித் சர்மா எல்லா ஃபார்மட்டிலும் அபாரமாக ஆடக்கூடிய தலைசிறந்த பேட்ஸ்மேன். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பாக ஆடி வெற்றிகரமான வீரராக திகழ்கிறார். அவர் இவ்வளவு நாள் ஏன் டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை என்பது எனக்கு புரியவில்லை. ரோஹித் சர்மா மாதிரியான ஒரு வீரரை ஆடும் லெவனில் எடுக்காமல் ஒதுக்குவது என்பது மிகவும் கடினமான முடிவு. அவருடைய திறமை என்னை வியக்கவைத்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் வெற்றிகரமாக திகழ்வார் என்று நம்புகிறேன். இந்திய அணிக்கு கிடைத்த வரப்பிரசாதம் ரோஹித் சர்மா என்று லாரா புகழ்ந்துள்ளார்.