ஐபிஎல் 13வது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று பிரெட் லீ ஆருடம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐபிஎல் தொடங்கவுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. 

செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. எனவே ஐபிஎல்லுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ஆகஸ்ட் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனைத்து அணிகளும் செல்லவுள்ளன. 

ஐபிஎல் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், இந்த சீசனில் டைட்டிலை சிஎஸ்கே அணி தான் வெல்லும் என பிரெட் லீ ஆருடம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலரும் ஐபிஎல்லில் கேகேஆர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடியவருமான பிரெட் லீ, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பேசும்போது இதை தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய பிரெட் லீ, சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய பலமே, அந்த அணியில் அனுபவம் வாய்ந்த முதிர்ச்சியான வீரர்கள் பலர் உள்ளனர். பக்குவப்பட்ட அணி சிஎஸ்கே. இளம் வீரர்களும் உள்ளனர். ஆனால் நிறைய வீரர்கள் நீண்டகாலமாக ஆடுபவர்கள். அதேபோல ஐக்கிய அரபு அமீரகத்தின் 40 டிகிரி செல்சியஸ் வெயில். எனவே ஸ்பின் பவுலிங்கிற்கு ஆடுகளங்கள் சாதகமாக இருக்கும். அது சிஎஸ்கேவிற்கு சாதகமாக இருக்கும். அதுமட்டுமல்லாது அந்த கண்டிஷன், சிஎஸ்கே அணிக்கு ஹோம் கண்டிஷன் உணர்வை கொடுக்கும். எனவே ஐக்கிய அரபு அமீரகத்தின் கண்டிஷன் சிஎஸ்கேவிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் சிஎஸ்கே தான் வெல்லும் என பிரெட் லீ தெரிவித்துள்ளார். 

2010, 2011, 2018 ஆகிய 3 சீசன்களில் டைட்டிலை வென்றுள்ள சிஎஸ்கே அணியில், தோனி, ரெய்னா, ஜடேஜா, டுப்ளெசிஸ், ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ, இம்ரான் தாஹிர், அம்பாதி ராயுடு, ஹர்பஜன் சிங் என அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர். அதைத்தான் பிரெட் லீ சுட்டிக்காட்டியுள்ளார்.