விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன். எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக ஆடி, இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். விராட் கோலி இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுதும் அனைத்து நாடுகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கக்கூடிய மாபெரும் சக்தி. இந்திய அணி கடந்த முறை 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்தபோது, வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவில் வென்று சாதனை படைத்தது இந்திய அணி.

இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. கடந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்மித்தும் வார்னரும் தடை காரணமாக ஆடாத நிலையில், இந்த முறை ஸ்மித்தும் வார்னரும் ஆடுவார்கள் என்பதால் இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. எனவே போட்டி கடுமையாக இருக்கும். 

இந்திய அணியில் விராட் கோலி தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர். எனவே விராட் கோலியை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து பிரெட் லீ பேசியுள்ளார்.

இந்திய அணியை வீழ்த்த வேண்டுமென்றால், விராட் கோலியை விரைவில் வீழ்த்த வேண்டும். எனவே இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் பிரெட் லீ, உலகத்தரம் வாய்ந்த தலைசிறந்த வீரர் விராட் கோலி. விராட் கோலிக்கு எதிராக சரியான மற்றும் துல்லியமான திட்டங்களை வகுத்து பந்துவீச வேண்டும். தொடரின் தொடக்கத்திலேயே விராட் கோலியை ஆதிக்கம் செலுத்த விடாமல் அழுத்தம் கொடுத்தால், தொடர் முழுவதும் அவரை தடுத்துவிடலாம் என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார். 

விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்களுடன் 1274 ரன்களை குவித்துள்ளார். இந்த  5 சதங்களில் 4 சதங்கள், 2014-2015 சுற்றுப்பயணத்தில் அடித்தது. அந்த சுற்றுப்பயணத்தில் கோலி அபாரமாக ஆடினார். ஆனால் கடந்த 2018 சுற்றுப்பயணத்தில் பெரியளவில் சோபிக்கவில்லை.