ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் கள நடுவர்களின் தொடர்ச்சியான தவறான முடிவுகள் வெஸ்ட் இண்டீஸ் அணியை மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பையும் அதிருப்தியடைய செய்தது. 

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நாட்டிங்காமில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனினும் ஸ்மித் - அலெக்ஸ் கேரியின் பொறுப்பான பேட்டிங் மற்றும் கடைசி நேர குல்டர்நைலின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 288 ரன்களை குவித்தது. 

289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹோப், பூரான், கேப்டன் ஹோல்டர் ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும், ஒரு நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததால் கடைசியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்த போட்டியில் கள நடுவர்கள் தொடர்ச்சியாக தவறான முடிவுகளை எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை ரிலாக்ஸாக ஆடவிடாமல் அவர்களை பதற்றத்திலேயே வைத்திருந்தனர் அம்பயர்கள். பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுத்து பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டிய வேலையை செய்ய வேண்டியது எதிரணி. ஆனால் எதிரணி செய்ய வேண்டிய வேலையை அம்பயர்களே செய்தனர். ஒரே ஓவரில் 2 முறை கெய்லுக்கு தவறான அவுட் கொடுக்கப்பட்டு, டி.ஆர்.எஸ் மூலம் களநடுவரின் தீர்ப்பு தவறு என்பதை நிரூபித்து தனது இன்னிங்ஸை காப்பாற்றிக்கொண்டார் கெய்ல்.

ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் அம்பயர் எல்பிடள்யூ கொடுக்க, அதிருப்தியடைந்த கெய்ல் சற்றும் யோசிக்காமல் ரிவியூ கேட்டார். தேர்டு அம்பயர் ஆராய்ந்ததில் பந்து ஸ்டம்பை மிஸ் செய்ததால் அவுட்டில்லை என்றானது. கெய்ல் களத்தில் நீடித்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆட ஆரம்பித்த கெய்ல், ஸ்டார்க் வீசிய 5வது ஓவரில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கெய்ல் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இந்த எல்பிடபிள்யூவிற்கும் கெய்ல் ரிவியூ கேட்டார். பாதி பந்து ஸ்டம்பில் பட்டதால் அது அம்பயர் கால் என்பதால், கள நடுவரின் தீர்ப்புப்படி கெய்ல் வெளியேறினார். 

ஆனால் கெய்ல் அவுட்டானதற்கு முந்தைய பந்து நோ பால். அதை அம்பயர் கவனிக்காததால் அதற்கு நோ பால் கொடுக்கவில்லை. ஒருவேளை அந்த பந்துக்கு நோ பால் கொடுக்கப்பட்டிருந்தால், கெய்ல் அவுட்டான அடுத்த பந்து ஃப்ரீ ஹிட்டாக இருந்திருக்கும். அப்படி பார்த்தால் கெய்ல் அவுட்டாகியிருக்கமாட்டார். ஆனால் அம்பயர்கள் நேற்று கெய்லை பாடாய் படுத்தி அனுப்பிவிட்டனர்.

கெய்லை அவுட்டாக்கி அனுப்பியது போதாதென்று, வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டருக்கும் ஒருமுறை தவறாக அவுட் கொடுத்தார் அம்பயர். ஆஸ்திரேலிய ரிஸ்ட் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா வீசிய 36வது ஓவரின் மூன்றாவது பந்தில் ஹோல்டருக்கு எல்பிடபிள்யூ கொடுத்தார் அம்பயர். அதை டிவியில் பார்க்கும் ரசிகர்களுக்கே, அந்த பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே போகும் என்பது அப்பட்டமாக தெரியும். அப்படியான ஒரு பந்தில் ஹோல்டருக்கு அவுட் கொடுத்தார். இதனால் களத்திலேயே அதிருப்தியை வெளிப்படுத்திய ஹோல்டர், உடனடியாக ரிவியூ எடுத்தார். அது அவுட்டில்லை என்பது உறுதியானதை அடுத்து தொடர்ந்து பேட்டிங் ஆடினார். 

இப்படியாக இந்த போட்டி முழுவதுமே அம்பயர்கள் தொடர்ச்சியாக தவறான முடிவுகளை எடுத்தனர். பவுலர் சற்று தீவிரமாக அப்பீல் செய்தாலே உடனடியாக அவுட் கொடுத்தனர். இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே கூட அதிருப்தியை ஏற்படுத்தியது. முன்னாள் வீரர்களும் செம கடுப்பாகிவிட்டனர். 

போட்டிக்கு பின்னர் அம்பயர்களின் தவறான முடிவுகள் குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வெயிட், தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார். இதுகுறித்து பேசிய பிராத்வெயிட், நாங்கள் பவுலிங் போடும்போது, பேட்ஸ்மேனின் தலைக்கு நேராக சென்ற பந்துகளுக்கு வைடு கொடுக்கப்பட்டது. அம்பயர்கள் தவறாக அவுட் கொடுக்கும்போது, எங்கள் அணியின் ஓய்வறையே ஒட்டுமொத்தமாக அதிருப்தியும் வெறுப்பும் அடைந்தது. எங்கள் கால்காப்பில் பட்டாலே உடனே அம்பயர்கள் அவுட் என்று கையை தூக்கிவிடுகின்றனர். நாங்கள் ரிவியூவை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ரிவியூவில், பந்து ஸ்டம்பை மிஸ் செய்வது உறுதியாகிறது. அதே எதிரணி வீரர்களின் கால்காப்பில் பந்து பட்டால், அம்பயர்கள் கையை தொங்கப்போட்ட படியே நிற்கிறார்கள். நாங்கள் ரிவியூ எடுத்தால் பந்து ஸ்டம்பை மிஸ் செய்கிறது. எங்களது ரிவியூ வேஸ்ட் ஆகிறது என்று தனது ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்திருக்கிறார்.