கங்குலி கேப்டனாக இருந்தபோது, இந்திய அணி ஃபீல்டிங்கில் மேம்பட்டது. யுவராஜ் சிங், கைஃப் ஆகிய இருவரும் அபாரமான ஃபீல்டர்களாக திகழ்ந்தார்கள். அதன்பின்னர் தோனியின் கேப்டன்சியில் ரெய்னா, ஜடேஜா, விராட் கோலி ஆகியோரும் ஃபீல்டிங்கில் சிறந்து விளங்கினர். 

தோனி, வீரர்களின் ஃபிட்னெஸுக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில், அதன்பின்னர் கோலி கேப்டனான பிறகு, ஃபீல்டிங்கில் சிறந்து விளங்குவதை உறுதி செய்யும் விதமாக, வீரர்களின் உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்தினார். அதனால் ஃபிட்னெஸில் சிறந்து விளங்குவதுடன், ஃபீல்டிங்கில் அசத்தக்கூடிய வீரர்களுக்கு மட்டும்தான் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதனால் இந்திய அணியின் ஃபீல்டிங் தரம் உயர்ந்தது. சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் சிறந்த ஃபீல்டராக திகழ்ந்தார். ஆனால் அவர் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் ஆடவில்லை. இந்திய அணியை அனைத்து வகையிலும் முன்னின்று வழிநடத்துவதுடன், வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் கேப்டன் கோலியும் அபாரமான ஃபீல்டர் தான். ஜடேஜாவின் ஃபீல்டிங் வேற லெவல். இந்திய பவுலர்களால் அவுட்டாக்க முடியாத அளவிற்கு, சிறப்பாக பேட்டிங் ஆடும் எதிரணி பேட்ஸ்மேன்களை எப்படியாவது தனது சாமர்த்தியமான நேர்த்தியான ஃபீல்டிங்கால் ரன் அவுட்டாக்கி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திவிடுவார்.

எனவே இவர்கள் அனைவருமே நல்ல ஃபீல்டர்கள் தான். கொரோனா அச்சுறுத்தலால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், சில முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடி வருகின்றனர். 

அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கிடம், ரசிகர் ஒருவர், யுவராஜ் சிங் - கோலி - ரெய்னா - ஜடேஜா ஆகிய நால்வரில் இந்தியாவின் மிகச்சிறந்த ஃபீல்டர் யார் என்று கேட்டார். இந்த கேள்வியில் அந்த ரசிகர் முகமது கைஃபின் பெயரை விட்டுவிட்டார்,

அந்த கேள்விக்கு பதிலளித்த பிராட் ஹாக், நால்வருமே சிறந்த ஃபீல்டர்கள் தான். ஆனால் ஜடேஜா தான் பெஸ்ட் என்று தெரிவித்தார்.