இந்திய அணியை இந்திய மண்ணில் வீழ்த்துவது மிகக்கடினம். சொந்த மண்ணில் மிகவும் வலுவான அணி இந்தியா. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து என எந்த அணி இந்தியாவிற்கு வந்தாலும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தான் வெற்றி பெறும்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அதன் சொந்த மண்ணில் எவ்வளவு வலுவான அணிகளோ, அதைவிட ஒரு மடங்கு கூடுதலாக இந்திய அணி சொந்த மண்ணில் வலுவான அணி. அந்தவகையில், இந்தியாவில் இந்தியாவை வீழ்த்துவது நிறைய பெரிய அணிகளின் கனவு. 

இந்நிலையில், இந்திய அணியை இந்தியாவில் வீழ்த்த எந்த அணியால் முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பிராட் ஹாக், இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணியால் மட்டுமே முடியும். ஏனெனில் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்கள், மிகச்சிறந்த ஸ்பின்னர்களை கொண்டுள்ள பாகிஸ்தான் அணியின் பேட்டிங் டெப்த்தும், இந்திய அணியை போன்று சிறப்பாக உள்ளது. இவையனைத்தையும் விட, இந்தியாவின் கண்டிஷனை பற்றி நன்றாக தெரிந்த அணி பாகிஸ்தான். இந்திய கண்டிஷனை அறிந்த, இந்திய அணியை வீழ்த்தும் பலம் வாய்ந்த அணி பாகிஸ்தான்.

ஆனால் பாகிஸ்தான் அணியால் இந்தியாவிற்கு செல்லமுடியாது. அதனால் அடுத்ததாக வாய்ப்புள்ள அணி ஆஸ்திரேலியா. ஸ்மித், வார்னர், லபுஷேன் என சிறந்த பேட்டிங் வரிசையை பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய அணியால் இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.