உலக கோப்பை தோல்விக்கு பின்னர் விராட் கோலியை கேப்டன்சியிலிருந்து நீக்குவது குறித்த விவாதங்கள் பொதுவெளியில் நடந்துவருகின்றன. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் தோற்று வெளியேறியதை அடுத்து, கேப்டன் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தன்னிச்சையாக செயல்பட்டது குறித்த தகவல் வைரலானது. 

விராட் கோலி - சாஸ்திரியின் ஆதிக்கம், அணி தேர்விலும் எதிரொலித்தது. கேப்டன் கோலி தனக்கு நெருக்கமான வீரர்கள் மற்றும் தனது விசுவாசிகளுக்குத்தான் அணியில் முக்கியத்துவம் அளிப்பதாகவும் துணை கேப்டன் ரோஹித் சர்மாவின் பேச்சுக்கு செவிமடுப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ரோஹித் - கோலி தலைமையில் இந்திய அணியில் 2 கேங்குகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது. 

அடுத்த உலக கோப்பையை மனதில்வைத்து, இந்திய அணியில் சிக்கல்களை கலைந்து வலுவான அணியை உருவாக்க சரியான ஆள் ரோஹித் சர்மா தான். ரோஹித் கேப்டனாக இதுவே சரியான தருணம் என ஒரு பிசிசிஐ அதிகாரி தெரிவித்திருந்த கருத்து காட்டுத்தீயாய் பரவிய நிலையில், விராட் கோலி தான் கேப்டனாக தொடர்வார் என்ற ஒரு கருத்தும் வலுவாகவுள்ளது. 

ரோஹித் சர்மா ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி 4 முறை கோப்பையை வென்றுகொடுத்தார். இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தனது கேப்டன்சி திறனை காட்டியுள்ளார். 

இந்நிலையில், இருவரில் யார் இந்திய அணிக்கு சரியான கேப்டன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பிராட் ஹாக், ரோஹித் சர்மா ஐபிஎல்லில் அவரது அணியை அபாரமாக வழிநடத்தியுள்ளார். ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி பலமுறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் கோலி தலைமையிலான ஐபிஎல் அணி பெரிதாக சாதிக்கவில்லை.

ஆனால் இந்திய அணியின் கேப்டன் என்று பார்க்கும்போது அதற்கு கோலி தான் சரியான நபர். அவர் ஒரு சிறந்த வீரராக முன்னின்று அணியை வழிநடத்துகிறார். அவர்தான் இந்திய அணியின் மிகவும் ஃபிட்டான வீரர். ஒரு வீரராகவும் ஃபிட்னெஸிலும் தனது அணிக்கு முன்னுதாரணமாக திகழும் கோலி தான் கேப்டனுக்கு சரியான வீரர் என்று தெரிவித்த ஹாக், கடந்த ஓராண்டாக கோலி அபாரமாக செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.