ஜடேஜாவால் சிஎஸ்கே அணியின் கேப்டன்சியில் ஜொலிக்க முடியாமல் போனதற்கான காரணம் என்னவென்று ஆஸி., முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து கூறியுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து தோனி விலக, ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்படவில்லை. ஜடேஜாவின் கேப்டன்சியில் தொடர் தோல்விகளை தழுவியது சிஎஸ்கே அணி. கேப்டன்சி அழுத்தத்தால் ஜடேஜா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சொதப்பினார். சிஎஸ்கே அணியும் தொடர் தோல்விகளை தழுவியது. அதன்விளைவாக கேப்டன்சியிலிருந்து ஜடேஜா விலகியதையடுத்து தோனி மீண்டும்கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
தோனி கேப்டன்சியை ஏற்ற அடுத்த போட்டியிலேயே சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. அடுத்ததாக சிஎஸ்கே அணி இன்று ஆர்சிபியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், ஜடேஜா கேப்டன்சியில் ஜொலிக்க முடியாமல் போனதற்கான காரணம் குறித்து ஆஸி.,முன்னாள் வீரர் பிராட் ஹாக் பேசியுள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பிராட் ஹாக், சிஎஸ்கே அணி ஜடேஜாவிடம் கேப்டன்சியை ஒப்படைத்தது நல்ல முடிவுதான். சிஎஸ்கே அணியில் தோனிக்கு அடுத்து கேப்டன்சியை ஏற்க ஜடேஜாவை விட சரியான நபரை தேர்வு செய்ய முடியாது. கேப்டன்சிக்கு ஏற்ற நபர் ஜடேஜா தான். ஜடேஜாவிற்கு கேப்டன்சியில் அனுபவம் கிடையாது. மிகப்பெரிய ஃப்ரான்ச்சைஸி அணியான சிஎஸ்கேவின் கேப்டன்சியை நேரடியாக ஏற்று செயல்படுவது என்பது மிகவும் கடினமான விஷயம் தான்.
தோனியின் உதவி ஜடேஜாவிற்கு இருக்கும் என்பதால் சிஎஸ்கே அணியில் கேப்டன்சி மாற்றம் எளிமையாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் தோனி ஒரு கட்டத்தில் ஒதுங்கிக்கொண்டு, முழு பொறுப்பையும் ஜடேஜாவிடம் கொடுத்தபின், ஜடேஜாவின் தோள்களில் அதிக பொறுப்பும் சுமையும் இறங்கியது. அவரே சுயமாக முடிவுகள் எடுக்க வேண்டும் என்ற நிலை உருவானது. பவுலர்களுக்கு சரியாக வழிகாட்ட முடியாமலும், சரியான முடிவுகளை எடுக்க முடியாமலும் திணறினார். முக்கியமான கட்டங்களில் அழுத்தமான சூழல்களில் கடுமையாக ஜடேஜா திணறினார்.
ஒரு கேப்டனாக மற்ற வீரர்களின் ஆட்டத்தை பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததால் அவரது ஆட்டத்தின் மீது கவனம் செலுத்த முடியாமல் திணறினார். அவர் ரிலாக்ஸாக இருந்தால் நன்றாக ஆடுவார். தோனி கேப்டன்சியை ஏற்றது, ஜடேஜாவின் இயல்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவர உதவும் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
