இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி கட்டாயத்துடன் இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. 

மான்செஸ்டரில் நடந்துவரும் இந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் அடித்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதித்தது.  இதையடுத்து நான்காம் நாளான நேற்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாவது செசனில் ஆல் அவுட்டானது. 242 ரன்கள் இருந்தபோது, 5வது விக்கெட்டாக ப்ரூக்ஸின் விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கிரைக் பிராத்வெயிட் 75 ரன்களும் ப்ரூக்ஸ் 68 ரன்களும் சேஸ் 51 ரன்களும் அடித்தனர். அவர்களை தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. இதையடுத்து 187 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்ட முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் அடித்துள்ளது. 219 ரன்கள் முன்னிலையுடன், கடைசி நாள் ஆட்டம் நடக்கவுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டதால், இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு குறைந்தது. ஆனாலும் கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் விரைவில் முடிந்தவரை ஸ்கோர் செய்துவிட்டு, வெஸ்ட் இண்டீஸை இரண்டாவது இன்னிங்ஸில் ஆல் அவுட் செய்ய முயலும் இங்கிலாந்து. 

இந்த போட்டியில், சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸின் ப்ரூக்ஸை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தியது ஸ்டூவர்ட் பிராட் தான். அதன்பின்னர் பிளாக்வுட், டௌரிச் ஆகிய இருவரையும் டக் அவுட்டாக்கி, இங்கிலாந்துக்கு வெற்றி நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கவிட்டது பிராட் தான். கடந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் 95 ரன்களை குவித்து வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த பிளாக்வுட்டை டக் அவுட்டாக்கினார் பிராட். அதுவும் பிராட் வீசிய அந்த பந்து, படு மிரட்டலானது. செம இன்ஸ்விங்; பந்து மேலெழும்பாமல் சென்றதால் பேட்ஸ்மேனால் அதை எதிர்கொள்ளவே முடியவில்லை. அந்த இடத்தில் பிளாக்வுட் இல்லாமல் வேறு எந்த பேட்ஸ்மேன் இருந்திருந்தாலும், கிளீன் போல்டு உறுதி. ஏனெனில் அந்த பந்து அந்த மாதிரி.. அந்த வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டுவீட் செய்துள்ளது. அந்த வீடியோ இதோ...