கிரிக்கெட் வீரர்கள் பந்தை பளபளப்பாக எச்சில் தொட்டு தேய்க்கும் முறைக்கு ஐசிசி தடை விதித்துள்ள நிலையில், அதுகுறித்து புவனேஷ்வர் குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்திவருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ், மனித குலத்தின் வாழ்க்கை முறையிலும் பழக்கவழக்கங்களிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 

ஐசிசி-யும் பந்தை எச்சில் தொட்டு தேய்ப்பதற்கு தடை விதித்துள்ளது. இது பவுலர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஸ்விங் செய்வதற்காக பந்தை எச்சில் தொட்டு தேய்த்து பளபளப்பாக்குவதுதான் பவுலர்களின் வழக்கம். இந்நிலையில், அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புவனேஷ்வர் குமார், எச்சில் தொட்டு தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை மித வேகத்தில் ஸ்விங் செய்யும் என்னை போன்ற பவுலர்களுக்கும் ஸ்பின்னர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். 145 கிமீ வேகத்தில் வீசும் பவுலர்களுக்கு அது அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் தங்களது பவுலிங் வேகத்தை மேலும் அதிகரித்து வீசுவார்கள். ஆனால் என்னை போன்ற மித வேகத்தில் ஸ்விங் செய்யும் பவுலர்களுக்கு ரொம்ப கஷ்டம். அதுவும் இங்கிலாந்து மாதிரியான ஸ்விங்கிற்கு சாதகமான கண்டிஷனில் எல்லாம் பாதிப்பாக இருக்கும். எனவே இதற்கு ஐசிசி மாற்றுவழியை ஏற்படுத்தி தரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

பும்ரா, ஷமி ஆகிய இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் 145 கிமீ வேகத்தில் வீசக்கூடியவர்கள். எனவே அவர்கள் வேகத்தை வைத்து பேட்ஸ்மேன்களை மிரட்டுவார்கள். ஆனால் ஸ்விங் பவுலர்களுக்கு புவனேஷ்வர் குமார் சொன்னதுபோல் சிக்கல் தான். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகத்தான் உள்ளது. இதில் எச்சில் தொட்டு தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை, பவுலர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.