மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார் குஜராத் ஜெயிண்ட்ஸ் கேப்டன் பெத் மூனி. அவர் காயத்தால் ஆஸ்திரேலியாவிற்கு சென்றதால் அவருக்கு மாற்று வீராங்கனையாக தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வர்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 2ம் தேதி தொடங்கி முதல் சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. யுபி வாரியர்ஸ் அணி 3ம் இடத்திலும், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 4ம் இடத்திலும் உள்ளன. ஆர்சிபி அணி கடைசி இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸும் குஜராத் ஜெயிண்ட்ஸும் மோதிய முதல் போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
அந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் ஆட தொடங்கி, 3பந்துகள் ஆடியபோதே குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் பெத் மூனி காயமடைந்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். கணுக்காலில் காயமடைந்த பெத் மூனி, அதற்கடுத்த 2 போட்டிகளிலும் ஆடவில்லை.
குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து ஏலத்தில் பெத் மூனியை வாங்கிய அவரையே கேப்டனாகவும் நியமித்திருந்தது. ஆனால் முதல் போட்டியிலேயே காயமடைந்த அவர், காயத்திலிருந்து குணமடைய சிறிது காலம் ஆகும் என்பதால் அவர் ஆஸ்திரேலியாவிற்கு திரும்புகிறார். அவருக்கு மாற்று வீராங்கனையாக தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இந்திய வீராங்கனை ஸ்னே ராணா நியமிக்கப்பட்டுள்ளார். 29 வயதான ஆஸ்திரேலியாவின் சீனியர் வீராங்கனைகளில் ஒருவரான பெத் மூனி காயத்தால் விலகியது குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு. பெத் மூனி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 61 போட்டிகளில் ஆடி 1649 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
