Bengaluru Stadium Stampede : பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடந்த நெரிசல் விபத்தில் உயிர் தப்பிய ஒருவர், ஆர்சிபி (RCB), கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளரான DNA நிறுவனம் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

Bengaluru Stadium Stampede : பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஜூன் 4 அன்று நடந்த நெரிசல் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிர் தப்பியதாகக் கூறும் 25 வயது நபர் ஒருவர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளரான DNA நிறுவனம் ஆகியோர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். 

ரோலன் கோம்ஸ் என அடையாளம் காணப்பட்ட புகார்தாரர், 17-வது கேட் அருகே ஏற்பட்ட நெரிசலில் தனது தோள்பட்டை இடப்பெயர்ச்சி அடைந்ததாக கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் தெரிவித்தார். இலவச நுழைவு மற்றும் மைதானத்தில் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என்று சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, டிக்கெட் இல்லாமல் ஆயிரக்கணக்கானோருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். 
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தாதது, மோசமான திட்டமிடல் மற்றும் அமைப்பாளர்களின் அலட்சியம் ஆகியவை குழப்பம், காயங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததாக கோம்ஸ் குற்றம் சாட்டினார். 

அவரது புகாரின்படி, கேட்டுகள் திறக்கப்பட்டபோது ரசிகர்கள் உள்ளே பாய்ந்ததில் பலர் மிதிபட்டனர். அவர் பார்வையாளர்களால் VSH மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக அமைப்பாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தார். 

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜயேந்திரா, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), RCB மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளரான DNA ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் கூறினார். முதலமைச்சர் தான் குற்றவாளி எண் 1, துணை முதலமைச்சர் குற்றவாளி எண் 2, உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா குற்றவாளி எண் 3 என்றும் அவர் கூறினார். கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்த பின்னரே அரசு நடவடிக்கை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.


"காவல்துறை அதிகாரிகளை பலிகடா ஆக்குவதற்குப் பதிலாக, முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்," என்று விஜயேந்திரா கூறினார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னரே முதலமைச்சர் விழித்தெழுந்ததாக கர்நாடக பாஜக தலைவர் தெரிவித்தார். "முதலமைச்சர் நள்ளிரவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, பெங்களூரு காவல் ஆணையர் உட்பட ஐந்து காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தார். 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அரசு தவறு செய்ததை முதலமைச்சர் நேரடியாக ஒப்புக்கொண்டதற்கு இதுவே சான்று," என்று அவர் கூறினார்.
மாநில அரசு தனது சொந்த தோல்வியை மறைக்க காவல்துறையை பலிகடா ஆக்கியதாக விஜயேந்திரா குற்றம் சாட்டினார்.

"நீங்கள் காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளீர்கள், ஆனால் உளவுத்துறையைச் சேர்ந்த எந்த அதிகாரியும் அவர்களின் தோல்விக்காக பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை ஏன்?" என்று அவர் கேள்வி எழுப்பினார். உளவுத்துறை நேரடியாக முதல்வரின் கீழ் செயல்படுவதால், அவர்களை பணியிடை நீக்கம் செய்தால் முதல்வருக்கே சிக்கல் ஏற்படும் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். 30,000-40,000 பேர் கூடுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்த நிலையில், கிட்டத்தட்ட 2-3 லட்சம் பேர் கூடியது, இது தெளிவாக ஒரு உளவுத்துறை தோல்வி - முதல்வரும் இப்போது ஒப்புக்கொண்ட ஒரு தோல்வி. (ANI)