டெஸ்ட் கிரிக்கெட்டை நேரில் காணும் ரசிகர்கள் குறைவாகவே உள்ளனர். ஸ்டேடியத்திற்கு குறைவான கூட்டமே வருவதால் வருமானமும் குறைகிறது. போட்டி முழுவதும் பகலில் நடத்துவதால்தான் ரசிகர்கள் கூட்டம் குறைவாக உள்ளது. பகலிரவு போட்டியாக நடத்தினால், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு சென்றுவிட்டு ரசிகர்கள் மாலை நேரத்தில் போட்டியை காண வருவார்கள் என்பதால் பகலிரவு போட்டியாக நடத்தலாம் என கங்குலி தெரிவித்திருந்தார். 

அதேபோலவே வங்கதேசத்துக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்துவது குறித்து கேப்டன் கோலியுடன் ஆலோசனை நடத்தி அவரது ஒப்புதலையும் பெற்று, வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து, அவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது. எனவே இந்திய அணி முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடுவது உறுதியாகிவிட்டது. 

இந்நிலையில், அந்த போட்டியை காண குறைந்தபட்ச டிக்கெட் விலையாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் ஆட்டத்தைக்காண, ரூ.50, 100, 150 என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகமான ரசிகர்களை கவரும் விதமாக, இந்தியாவில் நடத்தப்படும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியான இந்த போட்டிக்கு அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. ரூ.50 முதலே டிக்கெட் கிடைப்பதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுதான் பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் நோக்கமும் கூட. 

முடிந்தவரை போட்டி நடக்கும் 5 நாட்களும், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள 68 ஆயிரம் சீட்டுகளையும் நிறைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மாநில கிரிக்கெட் சங்கம் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வழக்கமாக பகலிரவு போட்டிகள் மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். ஆனால் ரசிகர்களின் வசதியை கருத்தில்கொண்டு மதியம் 1.30 மணிக்கே தொடங்குவது குறித்து, பிசிசிஐயிடம் பேசியுள்ளது பெங்கால் கிரிக்கெட் வாரியம். ஆனால் இதுகுறித்து இன்னும் பிசிசிஐ முடிவெடுக்கவில்லை. மதியம் 1.30 மணிக்கு தொடங்கினால், இரவு 8.30 மணிக்கு ஒருநாள் ஆட்டம் முடிந்துவிடும். இந்த தகவலை பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் அவிஷேக் டால்மியா தெரிவித்துள்ளார்.