இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை வகித்துவரும் நிலையில், நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. 

தொடரை தீர்மானிக்கும் இந்த போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது. மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் க்ராலி மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவரும் களமிறங்கினர். சிப்லி 44 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த க்ராலி 66 ரன்களில் அவுட்டானார். மூன்றாம் வரிசையில் இறங்கிய ஜோ டென்லி 27 ரன்களில் வெளியேறினார். பின்னர் கேப்டன் ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்த இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ், களத்திற்கு வந்த மாத்திரத்தில் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்துன் ரூட்டுடன் ஓலி போப் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்துள்ளது. 

இந்த போட்டியில் களத்திற்கு வந்ததும் அவுட்டாகி திரும்பிய பென் ஸ்டோக்ஸ், அவரை கிண்டலடித்த ரசிகர் ஒருவரை, பெவிலியனுக்கு செல்லும் வழியில் படியில் நின்று கொண்டு, முடிந்தால் மைதானத்துக்கு வெளியே வந்து சொல்லுடா என்றவாறு கெட்ட வார்த்தையிலும் பேசினார். ஸ்டோக்ஸ் ரசிகரை திட்டியது, கேமராவில் பதிவானதால், அதிவேகமாக வைரலானது.

இதையடுத்து தனது செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார் ஸ்டோக்ஸ். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து என்னை கிண்டலடித்தும் கடுப்பேற்றும்படியாகவும் செய்தனர். எனவே நான் அவுட்டாகி செல்லும்போது கோபத்தில் திட்டிவிட்டேன். ஆனால் எனது செயல் தவறானது என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் பயன்படுத்திய தகாத வார்த்தைகளுக்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் ஏராளமான சிறுவர்கள் இந்த போட்டியை நேரலையில் காண்பார்கள். எனவே அவர்களுக்கு நான் பேசியது தவறான முன்னுதாரணமாகிவிடும். அதனால் நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல், சிறப்பாகவும் கடும் போட்டியுடனும் சென்று கொண்டிருக்கும் இந்த தொடர், இந்த ஒரு செயலால் சீரழிந்துவிட வேண்டாம் என்று ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.