வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி 78 ரன்களை குவித்த பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளார்.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது வெற்றி கட்டாயத்தில் ஆடிவருகிறது இங்கிலாந்து. 

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ்(176)  மற்றும் டோமினிக் சிப்ளி(120) ஆகியோரின் சதத்தால் முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை குவித்தது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் அடித்திருந்தது. 

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. அதனால் கடைசி 2 நாட்களில் இங்கிலாந்து அணி வெற்றி என்ற முடிவை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்கேற்ப, நான்காம் நாளான நேற்றைய ஆட்டத்தில், கிரைக் பிராத்வெயிட், ப்ரூக்ஸ், சேஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். 2 செசன்களை நன்றாக ஆடியது வெஸ்ட் இண்டீஸ். 

ஆனால் ஐந்தாவது விக்கெட்டாக ப்ரூக்ஸ் அவுட்டானபின்னர், அடுத்த 45 ரன்களுக்குள் எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, 287 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸை சுருட்டியது இங்கிலாந்து. ப்ரூக்ஸின் விக்கெட்டை வீழ்த்தி, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஸ்டூவர்ட் பிராட், பிளாக்வுட் மற்றும் டௌரிச் ஆகிய இருவரையும் டக் அவுட்டாக்கினார். அதனால் தான் வெஸ்ட் இண்டீஸ் அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களுக்கு சுருண்டது. 

முதல் இன்னிங்ஸ் முடிவில் 187 ரன்கள் முன்னிலை பெற்றதால், விரைவில் ரன்களை குவித்தால், வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை பெற்ற இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்டத்தின் கடைசி சில ஓவர்களை பேட்டிங் ஆடியதால், அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கும் வகையில், பட்லரையும் பென் ஸ்டோக்ஸையும் தொடக்க வீரர்களாக இறக்கிவிட்டது இங்கிலாந்து அணி. 

பட்லர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கிராவ்லியும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் அடித்திருந்தது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் விரைவில் முடிந்தவரை ஸ்கோர் செய்துவிட்டு வெஸ்ட் இண்டீஸை பேட்டிங் ஆடவிட்டால்தான், அந்த அணியை ஆல் அவுட் செய்து வெற்றி பெற முடியும் என்ற கட்டாயத்தில் இருந்த இங்கிலாந்து அணிக்கு, பென் ஸ்டோக்ஸ் அருமையாக ஆடி அணியின் நோக்கத்திற்கு உதவிபுரிந்தார். 

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடி அரைசதம் அடித்தார் பென் ஸ்டோக்ஸ். 57 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 78 ரன்களை குவித்தார் பென் ஸ்டோக்ஸ். ஸ்டோக்ஸின் அதிரடியான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

எனவே மொத்தமாக 311 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 85 ஓவர்கள் பேட்டிங் ஆடியாக வேண்டும். 85 ஓவர்கள், வெஸ்ட் இண்டீஸை ஆல் அவுட் செய்ய இங்கிலாந்துக்கு போதுமானது. அதேவேளையில், வெஸ்ட் இண்டீஸால் 312 ரன்கள் என்ற இலக்கை அடிப்பது சாத்தியமில்லை என்றால், 85 ஓவர்களை முழுமையாக பேட்டிங் ஆடி போட்டியை டிரா செய்ய முடியும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.