உலக கோப்பை இறுதி போட்டியில் துரதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவத்திற்கு, பெருந்தன்மையுடன் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பதாக மனம் உருகியுள்ளார் இங்கிலாந்து அணியின் வெற்றி நாயகன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை வரலாற்றில் நேற்று நடந்த இறுதி போட்டி மாதிரி ஒரு போட்டி நடந்ததேயில்லை. போட்டி டிரா ஆனதால், சூப்பர் ஓவர் போடப்பட்டு, அதுவும் டிராவில் முடிந்ததால், அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து கோப்பையை வென்றது. 

கோப்பையை வெல்வதற்கு அருகில் சென்ற நியூசிலாந்து அணி பல துரதிர்ஷ்டங்களால் கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தது. 242 ரன்கள் என்ற இலக்கை எட்டுவதற்கு இங்கிலாந்தை கடுமையாக போராட வைத்தனர் நியூசிலாந்து பவுலர்கள். நியூசிலாந்து பவுலர்கள், தொடக்கம் முதலே இங்கிலாந்து அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தி நெருக்கடியை ஏற்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினர். 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணிக்கு ஸ்டோக்ஸும் பட்லரும் இணைந்து அபாரமான பார்ட்னர்ஷிப்பை அமைத்து கொடுத்தனர். 

அரைசதம் அடித்த அபாயகரமான பட்லரை ஃபெர்குசன் வீழ்த்தி பிரேக் கொடுத்தார். அதன்பின்னர் ஆட்டத்திற்குள் வந்த நியூசிலாந்து அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் நடந்த விஷயங்கள் அனைத்துமே துரதிர்ஷ்டமான சம்பவங்கள் தான். 49வது ஓவரில் ஸ்டோக்ஸின் கேட்ச்சை பிடித்த போல்ட், பவுண்டரி லைனை மிதித்ததால் இங்கிலாந்து அணிக்கு 6 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் இரண்டு பந்துகளை அபாரமாக வீசிய போல்ட், மூன்றாவது பந்தில் சிக்ஸர் கொடுத்தார். நான்காவது பந்தில் நடந்த சம்பவம் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவே அமைந்துவிட்டது. ஸ்டோக்ஸ் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓட, அந்த பந்தை பிடித்து கப்டில் த்ரோ அடிக்க, அந்த பந்து, ரன் ஓடும்போது டைவ் அடித்த ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. 

ஸ்டோக்ஸ் வேண்டுமென்றே தெரிந்து அந்த பந்தை தடுக்காததால், அவர்கள் ஓடிய 2 ரன்களையும் சேர்த்து 6 ரன்கள் வழங்கப்பட்டது. ஸ்டோக்ஸ் தனது பேட்டில் பந்து பட்டு பவுண்டரியை நோக்கி ஓடியதுமே, உடனடியாக மண்டியிட்டு இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி, தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். அதுவரை நியூசிலாந்து வசம் இருந்த போட்டி, அதன்பிறகுதான் இங்கிலாந்து வசம் வந்தது. அதன்பின்னர் போட்டி டிராவில் முடிந்தது. 

ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு சென்ற நான்கு ரன்கள் தான் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த கிஃப்ட். ஆனால் நியூசிலாந்து அணிக்கு அது மிகப்பெரிய ஏமாற்றம். அதிர்ஷ்டமோ என்னவோ, எது எப்படியிருந்தாலும் தனி ஒருவனாக போராடி இங்கிலாந்துக்கு கோப்பையை வென்று கொடுத்த பென் ஸ்டோக்ஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதை வென்ற ஸ்டோக்ஸ், பின்னர் பேசும்போது, தனது பேட்டில் பட்டு பந்து பவுண்டரிக்கு சென்ற அந்த சம்பவம் குறித்து பேசினார். அப்போது, அந்த சம்பவத்திற்காக நான் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று உருக்கமாக தெரிவித்தார். 

அது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம்தான் என்றாலும் அதற்கு மன்னிப்பு கேட்டார் ஸ்டோக்ஸ். இதுதான் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்.