இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

103 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 272 ரன்களை அடித்தது. மொத்தமாக 375 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்க அணி 376 ரன்களை இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்தது. 

சவாலான இந்த இலக்கை விரட்டும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் சிப்லி 29 ரன்களில் அவுட்டாகிவிட்டார். மற்றொரு தொடக்க வீரரான ரோரி பர்ன்ஸ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவருடன் இணைந்து ஜோ டென்லி களத்தில் உள்ளார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் அடித்துள்ளது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 255 ரன்கள் தேவை. பர்ன்ஸ் நன்றாக ஆடிவருகிறார். இதற்கு பின்னர் வரும் ரூட், ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, பட்லர் ஆகியோர் சிறப்பாக ஆடும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது, இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலரான ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. பிராட் ஏதோ சொல்ல, அதற்கு பென் ஸ்டோக்ஸ் கடுமையாக கடிந்துகொண்டார். இருவரும் காரசாரமாக வாக்குவாதம் செய்ய மற்ற வீரர்கள் அமைதியாக நின்று அதை பார்த்தனர். அதே இடத்தில் நின்ற கேப்டன் ஜோ ரூட், எதுவுமே சொல்லாமல் வாளாவிருந்தார். அவர்களை சமாதானம் செய்ய ரூட் முயலவே இல்லை. காரசாரமான கடும் வாக்குவாதத்திற்கு பின்னர், ஸ்டோக்ஸும் பிராடும் சியர்ஸ் பண்ணிக்கொண்டு சென்றனர். ஏனெனில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியாக வேண்டுமல்லவா? அதுதான் டீம் ஸ்பிரிட்.. அந்த வீடியோ இதோ..