வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவருமே சதம் விளாசினர். 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரண்டாவது போட்டி நேற்று மான்செஸ்டரில் தொடங்கியது. 

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கி ஆடிவருகிறது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பர்ன்ஸ் 15 ரன்களிலும், ஜாக் கிராவ்லி ரன்னே அடிக்காமலும், கேப்டன் ஜோ ரூட் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 81 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. 

தொடக்க வீரர் சிப்ளி சிறப்பாக ஆட, நான்காவது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், சிறப்பாக ஆடினார். சிப்ளியும் ஸ்டோக்ஸும் இணைந்து சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். முதல் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் அடித்திருந்தது. 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தை, 86 ரன்கள் அடித்திருந்த சிப்ளியும் 59 ரன்களுடன் களத்தில் இருந்த ஸ்டோக்ஸும் இணைந்து தொடர்ந்தனர். இருவரும் இன்றைய ஆட்டத்திலும் விக்கெட்டை இழந்துவிடாமல், நிதானமாகவும் தெளிவாகவும் ஆடினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. சிப்ளி, ஸ்டோக்ஸ் ஆகிய இருவருக்குமே கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டதுடன், மிஸ் ஃபீல்டிங்கும் நிறைய செய்தனர். மோசமான ஃபீல்டிங்கால் விக்கெட் எடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்டனர். 

அதை பயன்படுத்தி சிப்ளி சிறப்பாக ஆடி சதமடிக்க, அவரை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும் சதமடித்தார். சிப்ளி - ஸ்டோக்ஸ் இருவரும் இணைந்து இதுவரை நான்காவது விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கும் மேல் குவித்து தொடர்ந்து ஆடிவருகின்றனர். இந்த ஜோடியை வெஸ்ட் இண்டீஸ் அணியால் பிரிக்க முடியவில்லை. இங்கிலாந்து பெரிய ஸ்கோரை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு பின் பட்லர், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன் ஆகியோரும் சிறப்பாக பேட்டிங் ஆடுவார்கள் என்பதால், இங்கிலாந்து அணி மெகா ஸ்கோர் அடிப்பது உறுதி.