வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட்டில் பென் ஸ்டோக்ஸ் சிரத்தையெடுக்காமல், லாங் ஆனில் அடித்த சிக்ஸர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக பென் ஸ்டோக்ஸ் திகழ்கிறார். அதிலும் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் தனி ஒருவனாக கடைசி வரை போராடி இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த பின்னர் அவர் மிகப்பெரிய ஸ்டார் ஆகிவிட்டார். அதன்பின்னர் ஆஷஸ் தொடரிலும் சிறப்பாக ஆடி இங்கிலாந்துக்கு ஒரு போட்டியில், தனி ஒருவனாக வெற்றியை தேடிக்கொடுத்தார். இந்த இரண்டு இன்னிங்ஸ்களும் பென் ஸ்டோக்ஸின் கெரியரில் முக்கியமானவை. 

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் மிகச்சிறந்த பங்களிப்பை செய்து இங்கிலாந்து அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்துவரும் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸின் கெரியர் முடியும் போது, ஆல்டைம் பெஸ்ட் ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இடம்பிடிப்பார். 

பென் ஸ்டோக்ஸின் பேட்டிங் கடந்த சில ஆண்டுகளில் மேம்பட்டிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட்டில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 469 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 

இந்த இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸின் பேட்டிங் மிக முக்கியமானது. முதல் மூன்று விக்கெட்டுகள் ஆரம்பத்திலேயே விழுந்துவிட்ட நிலையில், தொடக்க வீரர் சிப்ளியுடன் இணைந்து 260 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தனர். பென் ஸ்டோக்ஸ் 176 ரன்களை குவித்து இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு ஆட்டமிழந்தார். 17 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்தார் பென் ஸ்டோக்ஸ்.

அதில் பென் ஸ்டோக்ஸ் சதமடித்த பிறகு, இன்னிங்ஸின் 115வது ஓவரில் அல்ஸாரி ஜோசப்பின் பந்தில் லாங் ஆனில் அடித்த சிக்ஸர் அபாரமானது. கால்நகர்த்தலே இல்லாமல் நின்ற இடத்திலிருந்தே, டிஃபென்ஸா அஃபென்ஸா என்பதே தெரியாத அளவிற்கு அடித்த ஷாட், லாங் ஆனில் சிக்ஸர் ஆனது. அந்த ஷாட்டில் அவருக்கு சிக்ஸர் கிடைத்தது, அவருக்கே ஆச்சரியமாக இருந்தது என்பதை அவரது ரியாக்‌ஷன் மூலமே தெரிந்துகொள்ள முடிந்தது. அருமையான அந்த ஷாட்டை ரசிகர்கள் விதந்தோதிவருகின்றனர். அந்த ஷாட்டை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ இதோ..