தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கேப்டவுனில் கடந்த 3ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி 223 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் க்ராலி 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜோ டென்லி 31 ரன்களிலும், சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஜோ ரூட் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டோமினிக் பெஸ் டக் அவுட்டானார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று களத்தில் நங்கூரமிட்டு ஆடிய தொடக்க வீரர் டோமினிக் சிப்ளியுடன், நான்காம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கும்போது பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து களத்திற்கு வந்தார். 

46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில், பென் ஸ்டோக்ஸ் களத்திற்கு வரும்போது, இங்கிலாந்து அணி மொத்தமாக  274 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. எனவே இங்கிலாந்து அணியின் நிலை வலுவாக இருப்பதால், முடிந்தவரை விரைவில் எவ்வளவு அதிகமாக ஸ்கோர் செய்யமுடியுமோ அதை செய்தால், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அது மிகவும் உதவிகரமாக இருக்கும். 

அதை உணர்ந்து களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடிய பென் ஸ்டோக்ஸ், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். தென்னாப்பிரிக்க பவுலிங்கை அடித்து நொறுக்கிய பென் ஸ்டோக்ஸ், 34 பந்திலேயே அரைசதம் அடித்தார். இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியில் சிறப்பாக ஆடிவருகிறார் பென் ஸ்டோக்ஸ்.  பொறுப்புடன் மறுமுனையில் நிலைத்து ஆடும் சிப்ளியும் சதமடித்துவிட்டார். அரைசதத்திற்கு பின்னர் ஸ்டோக்ஸ் ருத்ரதாண்டவம் ஆடிவருகிறார். சதத்தை நோக்கி வெறித்தனமாக ஆடிவருகிறார். 

இங்கிலாந்து அணி, 350 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து அணி கண்டிப்பாக மெகா இலக்கை நிர்ணயிப்பது உறுதியாகிவிட்டதால், கிட்டத்தட்ட வெற்றியும் உறுதியாகிவிட்டது.