தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது போட்டி கடந்த 3ம் தேதி தொடங்கி கேப்டவுனில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியை இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர்கள் பெரிய ஸ்கோரை அடிக்கவிடாமல் சுருட்டினர். அதிலும் குறிப்பாக அபாரமாக பந்துவீசிய ஆண்டர்சன், தனது அனுபவத்தை பயன்படுத்தி தென்னாப்பிரிக்க விக்கெட்டுகளை வீழ்த்தி குவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 28வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்து பவுலிங்கில் தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கே சுருண்டது. 

46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில், பென் ஸ்டோக்ஸ் களத்திற்கு வரும்போது, இங்கிலாந்து அணி மொத்தமாக  274 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. எனவே இங்கிலாந்து அணியின் நிலை வலுவாக இருப்பதால், முடிந்தவரை விரைவில் எவ்வளவு அதிகமாக ஸ்கோர் செய்யமுடியுமோ அதை செய்தால், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதை உணர்ந்து அதிரடியாக ஆடினார் பென் ஸ்டோக்ஸ். 

டெஸ்ட் போட்டியை போல அல்லாமல், டி20 போட்டியை போல பேட்டிங் ஆடிய பென் ஸ்டோக்ஸ், வெறும் 34 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின்னரும் தொடர்ந்து அதிரடியாக ஆடி 72 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 47 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 72 ரன்களை விரைவில் குவித்து கொடுத்தார். அது இங்கிலாந்து அணிக்கு பெரிய முன்னிலையை பெற மிகவும் உதவியாக இருந்தது. மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் சிப்லி, சதமடித்தார். அவர் மொத்தமாக 133 ரன்களை குவித்தார். இங்கிலாந்து அணி விரைவில் ரன் குவித்துவிட்டு, நான்காம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செசனிலேயே தென்னாப்பிரிக்காவை பேட்டிங் ஆடவிட்டது. 

இரண்டாவது இன்னிங்ஸை 46 ரன்கள் முன்னிலையுடன் ஆடிய இங்கிலாந்து அணி, 391 ரன்களை குவித்து, மொத்தமாக 437 ரன்கள் முன்னிலை பெற்று, 438 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கடினமான இலக்குடன் நான்காம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செசனில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது தென்னாப்பிரிக்க அணி.

இலக்கு கடினமானது என்பதால், ஜெயிக்கிறமோ இல்லையோ, ஆனால் தோற்றுவிடக்கூடாது என்பதில் தென்னாப்பிரிக்கா உறுதியாக இருந்தது. தொடக்க வீரர்கள் பீட்டர் மாலனும் டீன் எல்கரும் இணைந்து நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 71 ரன்களை சேர்த்தனர். எல்கர் 34 ரன்களில் ஆட்டமிழக்க, ஹம்சா, மஹாராஜ், டுப்ளெசிஸ் ஆகியோர் சோபிக்கவில்லை. முடிந்தவரை அதிகமான பந்துகளை ஆடி, இவர்கள் ஆட்டமிழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று மிகச்சிறப்பாக ஆடினார் பீட்டர் மாலன். நான்காம் நாள் முடிவில் எல்கர் மற்றும் ஹம்சாவின் விக்கெட்டுகளை இழந்திருந்த தென்னாப்பிரிக்கா, கடைசி நாள் ஆட்டம் தொடங்கியதுமே, நைட் வாட்ச்மேனாக இறங்கியிருந்த மஹாராஜின் விக்கெட்டை இழந்தது. அதன்பின்னர் டுப்ளெசிஸும் அவுட்டாக, மாலனுடன் இணைந்து சிறப்பாக ஆடி, தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடினார் வாண்டெர் டசன்.

களத்தில் நங்கூரமிட்டு சதத்தை நெருங்கிய மாலன் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த குயிண்டன் டி காக் 107 பந்தில் 50 ரன்கள் அடித்து ஜோ டென்லியின் பந்தில் அவுட்டானார். 140 பந்தில் 17 ரன்கள் அடித்திருந்த டசனை ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார். இதையடுத்து ஆட்டம் இங்கிலாந்தின் பக்கம் திரும்பியது. 

பிளாண்டரும் பிரிட்டோரியஸும் தோல்வியை தவிர்க்க போராடினர். ஆனால் அவர்கள் இருவரையுமே பென் ஸ்டோக்ஸ் வீழ்த்திவிட்டார். கடைசி விக்கெட்டாக நோர்ட்ஜேவையும் ஸ்டோக்ஸ் வீழ்த்த, இங்கிலாந்து அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்னும் 8 ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் டிரா செய்யும் நோக்கத்தை நிறைவேற விடாமல் கடைசி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்கு மற்றுமொரு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். 

இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக பேட்டிங் ஆடிய ஸ்டோக்ஸ், கடைசி நேரத்தில் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். எனவே அவர் தான் இந்த போட்டியின் ஆட்டநாயகனும் கூட. இதையடுத்து 1-1 என டெஸ்ட் தொடர் சமனடைந்துள்ளது. இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன.