Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ விராட் கோலி அவுட்டா இல்லையா..? நீங்களே முடிவு செய்யுங்க.. வைரலாகும் பிசிசிஐ ட்வீட்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் விராட் கோலிக்கு தேர்டு அம்பயர் தவறாக அவுட் கொடுத்த சம்பவம் குறித்து பிசிசிஐ செய்த ட்வீட் செம வைரலாகிவருகிறது.
 

bcci tweets about virat kohlis controversial wicket in second test against new zealand
Author
Mumbai, First Published Dec 3, 2021, 10:17 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடேவில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. மைதானம் ஈரமாக இருந்ததால் முதல் செசன் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. 11.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 12 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் அடித்துள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்களை சேர்த்தனர். ஷுப்மன் கில் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை வீழ்த்திய அஜாஸ் படேல், தனது அடுத்த ஓவரில் புஜாரா மற்றும் கோலி ஆகிய இருவரையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார். இன்னிங்ஸின் 30வது ஓவரை வீசிய அஜாஸ் படேல், அந்த ஓவரின் 2வது பந்தில் புஜாராவையும் கடைசி பந்தில் கோலியையும் வீழ்த்தினார். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மயன்க் அகர்வால் அபாரமாக ஆடி சதமடிக்க, அவருடன் இணைந்து ரிதிமான் சஹாவும் சிறப்பாக ஆடிவருகிறார்.

80 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி, அதே 80 ரன்னுக்கு 3 விக்கெட் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் விராட் கோலி அவுட்டே இல்லை. தேர்டு அம்பயர் தவறாக அவுட் கொடுத்துவிட்டார். 

அஜாஸ் படேல் வீசிய அந்த பந்தில் கோலிக்கு கள நடுவர் எல்பிடபிள்யூ அவுட் கொடுத்தார். ஆனால் மிகுந்த நம்பிக்கையுடன் உடனடியாக ரிவியூ செய்தார் விராட்கோலி. அதை நீண்ட நேரம் ஆய்வு செய்த தேர்டு அம்பயர் வீரேந்தர் ஷர்மா அவுட் கொடுத்தார். ஆனால் ரீப்ளேவில் பந்து பேட்டில் பட்ட பின்னர் தான் கால்காப்பில் பட்டது என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் அதற்கு அம்பயர் தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டார்.  தேர்டு அம்பயர் அவுட் கொடுத்த பின்பும், கள நடுவரிடம் பந்து பேட்டில் பட்டது என்பதை தெரிவித்துவிட்டு அதிருப்தியுடன் களத்தை விட்டு வெளியேறிய விராட் கோலி, பவுண்டரி லைனை பேட்டை வைத்து அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்திவிட்டு சென்றார். 

விராட் கோலி அவுட்டே இல்லை என்று, தேர்டு அம்பயரின் தவறான முடிவு குறித்து வாசிம் ஜாஃபர், பார்த்திவ் படேல் மற்றும் ஆர்பி சிங் ஆகிய முன்னாள் வீரர்கள் ட்வீட் செய்தனர். ரசிகர்களும் இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதித்துவருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்த பிசிசிஐ, விராட் கோலி அவுட்டா இல்லையா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்று ட்வீட் செய்துள்ளது. பிசிசிஐயின் இந்த ட்வீட் செம வைரலாகிவருகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios