கொரோனாவால் தள்ளிப்போன ஐபிஎல் 13வது சீசன், வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய இடங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்கவுள்ளன. எனவே ஐபிஎல் அணிகளும் வீரர்களும் ஐபிஎல்லுக்காக தயாராகிவருகின்றனர். 

இதற்கிடையே, இந்தியா - சீனா இடையேயான உறவில், எல்லையில் சீனாவின் அத்துமீறிய தாக்குதலால் பெரும் விரிசல் ஏற்பட்டது. அதன் விளைவாக, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியான பல கடும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது. ஹெலோ ஆப், ஷேர் இட், டிக் டாக் உள்ளிட்ட 49 சீன செயலிகளையும் அதைத்தொடர்ந்து மேலும் சீன செயலிகளையும் தடை செய்தது இந்திய அரசு. அதேபோல இந்தியாவில் முதலீடு செய்வதிலும் சீனாவிடம் கடுமை காட்டிவருகிறது இந்திய அரசு. 

சீனா மீது பொருளாதார ரீதியான அதிரடியான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துவருகிறது. ஆனால் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் மட்டும் சீன நிறுவனமான விவோ. எனவே சீன நிறுவனமான விவோவுடனான டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. 

இந்நிலையில், விவோவுடனான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாகவும், ஐபிஎல் 13வது சீசனுக்கு புதிய டைட்டில் ஸ்பான்சர் என்பதையும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இதுகுறித்து விரிவான விளக்கமோ அறிக்கையோ பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் விவோவுடனான டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை பிசிசிஐ முடித்துக்கொண்டதை மட்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு ஆண்டுக்கு ரூ.440 கோடி வீதம் ஐந்தாண்டுக்கு ரூ.2199 கோடிக்கு விவோவுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.