தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பிற்கு(நடா) பிசிசிஐ கட்டுப்பட்டுவிட்டது. இனிமேல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கு வேண்டுமானாலும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் ஊக்கமருந்து சோதனையை நடா நடத்தலாம்.

இதுவரை இந்திய வீரர்களின் ஊக்கமருந்து சோதனையை ஸ்வீடனை சேர்ந்த சர்வதேச ஊக்கமருந்து சோதனை மேலாண்மை நிறுவனம்தான் நடத்திவந்தது. அந்த நிறுவனம்தான் இந்திய வீரர்களின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து தேசிய ஊக்கமருந்து சோதனைக்கூடத்திற்கு அனுப்பிவந்தது. 

இந்நிலையில், பிசிசிஐ, நடா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் ஆகியவற்றிற்கு இடையே நடந்த கூட்டத்தில், நடாவுக்கு கட்டுப்படுவதாக பிசிசிஐ ஒப்புக்கொண்டதாக விளையாட்டுத்துறை செயலாளர் ஜூலனியா தெரிவித்துள்ளார். 

அதனால் இனிமேல் இந்திய வீரர்களின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளை சர்வதேச நிறுவனம் இந்த விஷயத்தில் தலையிடாது. தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனமே அதை செய்யும். அதனால் இனிமேல் இந்திய வீரர்களை எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம்(நடா) சோதனை செய்யலாம்.