IND vs SL: டாட்டூவை மறைக்க முழுக்கை சட்டை, மாஸ்க், தலையில் கேப் – மாறுவேஷத்தில் கேமராமேன் சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணியின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் கேமராமேனாக மாறுவேஷத்தில் சென்று பேட்டி எடுத்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
இந்திய அணி 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் நேற்று வரையில் முதலிடத்தில் இருந்தது. நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி அதிகபட்சமாக 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஆதலால் இந்திய அணி 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
NZ vs SA: இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக அதிக ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோல்வி!
நியூசிலாந்து 3ஆவது இடத்திலிருந்து சரிந்து 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் இன்று 33ஆவது லீக் போட்டி நடக்கிறது. மும்பையில் நடக்கும் இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணியின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் உலகக் கோப்பை கிரிக்கெட் மீதான தாக்கம் மக்களிடையே எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பியுள்ளார். தான் யார் என்பதை காட்டிக் கொள்ளாமல் அவர்களிடம் பேட்டி எடுக்க நினைத்துள்ளார். இதற்காக முழு கை சட்டை அணிந்தும், முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டும், தலையில் கேப் ஒன்றை வைத்துக் கொண்டும் கையில் வீடியோ கேமராவை எடுத்துக் கொண்டு மும்பையின் கடலோர பகுதிகளுக்கு சென்று மக்களிடையே பேட்டி எடுத்துள்ளார். அதன் பிறகு தான் யார் என்பதை காட்டிக் கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.