கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 4 மாதங்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து  - வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. முதல் போட்டி இன்று தொடங்கியது. ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் போட்டி நடத்தப்படுகிறது. 

4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்கியிருப்பது, கிரிக்கெட் உலகிற்கும் ரசிகர்களுக்கும் நல்ல சமிக்ஞையாக அமைந்துள்ளது. அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் என்ற நம்பிக்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் வந்துள்ளது. 

எனவே உலகளவில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஐபிஎல்லை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். உலகின் பணக்கார டி20 லீக் தொடரான ஐபிஎல்லில் ஆடுவதற்கு வெளிநாட்டு வீரர்களும் ஆர்வமாக உள்ளனர். மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல், கொரோனாவால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

வரும் அக்டோபர் 18ம் தேதி டி20 உலக கோப்பை தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடப்பதாக இருக்கும் இந்த உலக கோப்பை தொடர் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் ஐபிஎல்லை நடத்தும் திட்டத்தில் பிசிசிஐ உள்ளது. 

ஆனால் டி20 உலக கோப்பை குறித்து ஐசிசி இன்னும் திடமான முடிவை எடுக்காததால் பிசிசிஐ, ஐபிஎல்லை நடத்துவது குறித்து உறுதியுடன் திட்டமிட முடியவில்லை. ஆனால் பிசிசிஐ-யும் அதன் தலைவர் கங்குலியும் ஐபிஎல்லை கண்டிப்பாக நடத்துவது என்பதில் உறுதியாக உள்ளனர். அதுவும் இந்தியாவிலேயே நடத்த வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளனர். 

செப்டம்பர் மாதம் நடப்பதாக இருந்த ஆசிய கோப்பை தொடர் ரத்தாகியுள்ளது. ஆனால் ஐபிஎல்லை இந்த ஆண்டிலேயே நடத்துவதில் கங்குலி உறுதியாக இருக்கிறார். ஐபிஎல் இந்த ஆண்டே நடத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்த கங்குலி, மீண்டும் அதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தனது பிறந்தநாளான இன்று இந்தியா டுடேவின் இன்ஸ்பிரேஷன் நிகழ்ச்சியில் பேசிய கங்குலி, ஐபிஎல் குறித்தும் பேசினார். அப்போது, ஐபிஎல் நடக்காமல் 2020ம் ஆண்டு முடியாது. ஐபிஎல்லுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். 35-40 நாட்கள் கிடைத்தால் கூட போதும்; ஐபிஎல்லை நடத்தி முடித்துவிடலாம். அதேபோல எங்கு நடத்துவது என்பது பற்றியெல்லாம் முடிவெடுக்கவில்லை. வெளிநாடுகளில் நடத்துவதை விட, இந்தியாவில் நடத்துவதற்குத்தான் முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்றார். 

ஐபிஎல்லை தங்கள் நாடுகளில் நடத்த இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நியூசிலாந்து ஆகிய 3 நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பிசிசிஐ-யிடம் அனுமதி கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.