கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை 9300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 330 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக ஏப்ரல் 14(நாளை) வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்னும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால், ஊரடங்கு நீட்டிக்கப்படவுள்ளது. 

கொரோனாவால் விளையாட்டு போட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வரும் ஜூலை மாதம் தொடங்குவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடர், கொரோனா எதிரொலியாக ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்படவிருப்பதால், ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. 

அரசின் நடவடிக்கைகளை பொறுத்துத்தான் பிசிசிஐ முடிவெடுக்கும். ஆனால் அதற்குள்ளாக, ஐபிஎல்லை நடத்துவது குறித்த பல தகவல்கள் உலாவந்துகொண்டிருக்கின்றன. அக்டோபரில் தொடங்கவிருக்கும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் நடத்தப்படலாம் என்றும், டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதால் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐபிஎல் நடத்தப்படலாம் என்றும் பல தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. 

ஆனால் பிசிசிஐ இதுகுறித்து, அணி உரிமையாளர்களிடம் ஆலோசித்து, அரசின் அனுமதியையும் பெற்றுத்தான் நடத்தும். எனவே ஏப்ரல் 15 அன்றோ அல்லது மறுநாளோ பிசிசிஐ, அணி உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து ஐபிஎல்லை ஆரம்பத்தில் ஒத்திவைத்ததற்கு பிறகு, இப்போது மீண்டும் பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்குலி, நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறோம். கொரோனா விவகாரத்தில், அடையும் முன்னேற்றங்களை கவனிக்கிறோம். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஏர்போர்ட்டுகள் மூடப்பட்டிருக்கின்றன, மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள், அலுவலகங்கள் லாக்டவுன், யாருமே எங்கும் போக முடியாது. இது மே மாதத்தின் 10-20 தேதி வரை கிட்டத்தட்ட இதே நிலைதான் நீடிக்கும்.

அப்படியிருக்கையில் வீரர்களை எப்படி அழைப்பது, வீரர்கள் எப்படி பயணம் செய்வார்கள்? இப்போதைய சூழலில் விளையாட்டை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. விளையாட்டிற்கு சாதகமாக இப்போதைக்கு எதுவும் நடக்காது. எனவே ஐபிஎல்லை இப்போதைக்கு மறந்துவிடுங்கள் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.