இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) தலைவராக கங்குலி, கடந்த அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். நிரந்தர தலைவராக கங்குலி நியமிக்கப்படவில்லை. 9 மாதங்களுக்கு மட்டுமே தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்து, அணியின் அணுகுமுறையையும் சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட்டின் முகத்தையும் மாற்றி, தலைநிமிர செய்த கங்குலி, பிசிசிஐ-யின் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தனது சொந்த மண்ணான கொல்கத்தாவில், முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஆடவைத்தார். அதற்காக வங்கதேச அணியையும் ஒப்புக்கொள்ளவைத்து, இந்திய அணி ஆடிய முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக நடத்திமுடித்தார்.

கொரோனா அச்சுறுத்தலால், கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல், ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் நிலைமை தீவிரமடைந்து கொண்டே வருவதால் ஐபிஎல் இப்போதைக்கு நடக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. 

அவரது பிசிசிஐ தலைவர் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், நீட்டிப்பு குறித்தும் எந்த தகவலும் இல்லை. பதவி நீட்டிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, தற்போதைய சூழலில் கோர்ட் உட்பட அனைத்துமே மூடப்பட்டிருக்கின்றன. எனவே பதவி நீட்டிப்பு குறித்த எந்த அப்டேட்டும் இல்லை. இன்னும் நேரம் இருக்கிறது. எது நடக்கணும்னு இருக்கோ அதுதான் நடக்கும். எதுவுமே நமது கட்டுப்பாட்டில் இல்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார்.