இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுப்பதற்காக ஏற்கனவே 14ம் தேதி அமலில் இருந்த ஊரடங்கு, மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ரத்தாகிவிட்டன. ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ம் தேதி வரை(இன்று) ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இந்த சீசன் தாமதமாக தொடங்கப்பட நேர்ந்தால், குறைவான போட்டிகள் நடத்தப்படலாம். வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நடத்தப்படலாம், டி20 உலல கோப்பை அக்டோபர் 18ம் தேதி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக ஐபிஎல்லை நடத்தலாம் என்பன போன்ற பல கருத்துகள் உலாவந்தன. ஆளாளுக்கு ஒரு ஐடியா கொடுப்பதுடன், ஐபிஎல் குறித்த பல தகவல்கள் உலா வருகின்றன. ஆஸ்திரேலியாவில் அக்டோபரில் தொடங்கவுள்ள டி20 உலக கோப்பை, அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும், எனவே ஐபிஎல்லை அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பிசிசிஐ நடத்த திட்டமிட வாய்ப்புள்ளது என்றும் ஐசிசி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், ஏற்கனவே அரசின் உத்தரவை பெறாமல், கொரோனா நிலைமை கட்டுக்குள் வராமல் ஐபிஎல் நடத்தப்படமாட்டாது என்று தெரிவித்திருந்தது பிசிசிஐ. இந்நிலையில் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பின்னர் தான் ஐபிஎல் நடத்தப்படும்.