கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாத மத்தியிலிருந்து ஜூன் மாதம் வரை எந்த கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. ஜூலை மாதம் தான் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் நடந்தது. அதன்பின்னர் இங்கிலாந்து - அயர்லாந்து ஒருநாள் தொடர், இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான தொடர் என கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் போட்டிகள் நடக்க தொடங்கியுள்ளன. இங்கிலாந்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. 

ஐபிஎல் 13வது சீசன் செப்டம்பர் 19ம் தேதியிலிருந்து நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்தியாவில் மீண்டும் எப்போது கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 

ரசிகர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்லாது, ஐபிஎல்லில் ஆடாத உள்நாட்டு வீரர்களும், உள்நாட்டு போட்டிகள் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அந்தவகையில், ஐபிஎல் முடிந்ததும், உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் மற்றும் ரஞ்சி தொடர் ஆகியவற்றை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

ராகுல் டிராவிட் மற்றும் ஹேமங் ஜெயின் ஆகியோரின் தற்காலிக திட்டப்படி, நவம்பர் 19லிருந்து டிசம்பர் 7 வரையிலான காலக்கட்டத்தில் சையத் முஷ்டாக் அலி தொடரையும், அதன்பின்னர் டிசம்பர் 13ம் தேதி முதல் ரஞ்சி தொடரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரஞ்சி தொடர், அணிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஏதேனும் 2 நகரங்களில் மட்டும் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் விஜய் ஹசாரே, தியோதர் டிராபி தொடர்கள் நடத்தப்பட வாய்ப்பில்லை.