ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து செய்யப்பட்டு 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. 

கேரளாவை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலரான ஸ்ரீசாந்த், 2005ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளிலும் 53 ஒருநாள் போட்டிகளிலும் 10 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். 2011ல் இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார்.

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய ஸ்ரீசாந்த் மீது 2013ம் ஆண்டு சூதாட்டப் புகார் எழுந்தது. 2013 ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் அவரது இரண்டாவது ஓவரில் 14 ரன்கள் விட்டுக்கொடுப்பதற்கு அவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த புகாரை அடுத்து அவர் மீது பிசிசிஐ அதிரடி நடவடிக்கை எடுத்தது. 

சூதாட்டப்புகாரை அடுத்து ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அதன்பின்னர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட்டே ஆடவில்லை. அதன்பின்னர் திரைப்படத்தில் நடித்தார் ஸ்ரீசாந்த். 

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனில் கலந்துகொண்ட ஸ்ரீசாந்த், அந்த நிகழ்ச்சியில் கூட தன்மீதான சூதாட்ட புகார் குறித்து வருந்தினார். வெறும் 10 லட்சம் ரூபாய்க்காக தான் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தன் மீது குற்றம்சாட்டப்பட்டது மிகுந்த மனவேதனையை அளித்ததாகவும் அந்த காலக்கட்டம் தன் வாழ்நாளின் இருண்ட காலம் என்று தெரிவித்த ஸ்ரீசாந்த், சூதாட்டப்புகாரில் சிக்கி தனது கிரிக்கெட் வாழ்க்கை தன் கண்முன்னே அஸ்தமனமான போது தற்கொலை செய்துகொள்ளக்கூட முயன்றதாக வருத்தத்துடன் கூறியிருந்தார். 

இந்நிலையில், பிசிசிஐயின் குறைதீர்ப்பு அதிகாரி ஜெயின், ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடையை 7 ஆண்டுகளாக குறைத்துள்ளார். இதன்மூலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியுடன் ஸ்ரீசாந்தின் தடை முடிவடைகிறது. இதே தேதியில், 2013ம் ஆண்டு ஸ்ரீசாந்துக்கு தடை விதிக்கப்பட்டது. 7 ஆண்டுகளாக தடை குறைக்கப்பட்டதை அடுத்து, அடுத்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியுடன் தடை முடிகிறது. இப்போதே ஸ்ரீசாந்துக்கு 36 வயதாகிவிட்டது. அவரது தடை முடியும்போது அவருக்கு 37 வயதாகிவிடும். எனவே அவரது தடை முடிந்தாலும் அவர் மீண்டும் கிரிக்கெட் ஆடுவதற்கான வாய்ப்பு குறைவுதான். ஆனால் இது அவருக்கு பெரிய ஆறுதலாக இருக்கும்.