உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பல பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டன. குறிப்பாக இந்திய அணியின் பெரிய பலவீனமாக இருந்த மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக பல பரிசோதனைகள் செய்யப்பட்டன.

கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியின் 4ம் வரிசையை பூர்த்தி செய்ய பல வீரர்கள் அந்த வரிசையில் இறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார்கள். ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே, அம்பாதி ராயுடு என பலர் அந்த வரிசையில் இறக்கப்பட்டனர். ஒருவழியாக அம்பாதி ராயுடுதான் அந்த இடத்தில் உறுதி செய்யப்பட்டார். 

கடந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்னர், நான்காம் வரிசை வீரர் கண்டறியப்பட்டுவிட்டதாக ராயுடுவை குறிப்பிட்டு கேப்டன் கோலி தெரிவித்தார். உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடர் வரை ராயுடு அணியில் இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் ராயுடுவுக்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். 

உலக கோப்பை அணியின் மாற்று வீரர்கள் பட்டியலில் ராயுடு இடம்பெற்றிருந்தும் கூட, 2 வீரர்கள் காயத்தால் விலகிய நிலையில், ராயுடு அழைக்கப்படவில்லை. தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட்டும் விஜய் சங்கருக்கு பதில் மயன்க் அகர்வாலும் அணியில் இணைக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட விரக்தியால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ராயுடு. 

இந்திய அணியின் பெரிய பிரச்னையாகவும் பலவீனமாகவும் இருந்துவந்த மிடில் ஆர்டர் சிக்கல், உலக கோப்பையிலும் தொடர்ந்தது. அதன் எதிரொலி தான் இந்திய அணியின் தோல்வி. மிடில் ஆர்டர் வலுவாக இல்லை என்பதை எதிரணிகளுக்கு வெளிப்படையாக தெரியும் அளவிற்கு பலவீனமாக இருந்தது. 

இந்திய அணி அரையிறுதியில் தோற்று தொடரை விட்டு வெளியேறியதை அடுத்து, இந்திய அணி நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளாக செய்த பரிசோதனை முயற்சிகள் குறித்த கேள்விகளையும் இந்திய அணி தேர்வு குறித்த கேள்விகள் மற்றும் அதிருப்தி, ஆதங்கங்களை முன்னாள் வீரர்கள் பலர் முன்வைத்து வருகின்றனர். 

உலக கோப்பை தொடரின் முதல் சில போட்டிகளில் ராகுல் நான்காம் வரிசை வீரராக களமிறங்கினார். தவான் காயத்தால் விலகியதால் ராகுல் தொடக்க வீரராக இறக்கப்பட்டதால் நான்காம் வரிசையில் விஜய் சங்கர் இறங்கினார். அதன்பின்னர் அவரும் காயத்தால் விலகியதால் நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் இறக்கப்பட்டார். இவர்கள் அனைவருமே ஓரளவிற்கு அந்த வரிசையில் பங்களிப்பு செய்தாலும் சிறப்பாக ஆடவில்லை என்பதுதான் உண்மை. உலக கோப்பையில் அரையிறுதியுடன் வெளியேறியதை அடுத்து இந்திய அணியின் நான்காம் வரிசை மற்றும் மிடில் ஆர்டர் குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. 

இந்நிலையில், இந்திய அணியின் நான்காம் வரிசையில் ரஹானேவை ஆடவைக்க வேண்டும் என்று பிசிசிஐ அதிகாரி சஞ்சய் ஜக்தாலே கருத்து தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக ஒருநாள் அணியில் ஆடியும் தனக்கான இடத்தை உறுதி செய்துகொள்ளாத வீரர்கள் இந்திய அணியின் எதிர்காலம் கிடையாது. அந்தவகையில் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ரஹானேவை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 


 
இதே கருத்தைத்தான் கவாஸ்கரும் தெரிவித்திருந்தார். உலக கோப்பையில் ரஹானேவை 4ம் வரிசையில் ஆடவைத்திருக்க வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்திருந்தார். நல்ல பேட்டிங் டெக்னிக் கொண்ட ரஹானேவை தொடக்க வீரர் என்ற முத்திரையை குத்தி அணியிலிருந்து ஓரங்கட்டியதாகவும் கவாஸ்கர் குற்றம்சாட்டினார்.