இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் உலக கோப்பையுடன் முடிந்துவிட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கருத்தில்கொண்டு அந்த தொடர் முடியும் வரை பயிற்சியாளர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஜெயவர்தனே, டாம் மூடி, மைக் ஹெசன் ஆகியோர் விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

ஆனால் இதுகுறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவுள்ளதாக கூறப்படுபவர்களும் அந்த தகவலை உறுதி செய்யவில்லை. ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பித்திருப்பது மட்டுமே உறுதியாகியுள்ளது. 

தலைமை பயிற்சியாளர் பதவியில் ரவி சாஸ்திரியே தொடர்வதற்கான வாய்ப்புதான் அதிகம் உள்ளது என்ற ஒரு தகவலும் பரவியது. இந்நிலையில், அதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசியுள்ளார். 

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசியதாக வெளிவந்த தகவலில், தலைமை பயிற்சியாளரை மாற்றுவது என்பது அணியின் சமநிலையை சீர்குலைக்கக்கூடும். கேப்டன் கோலிக்கும் ரவி சாஸ்திரிக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக ரவி சாஸ்திரி சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். எனவே இந்த நேரத்தில் பயிற்சியாளரை மாற்றினால், அது அடுத்த 5 ஆண்டுகளுக்கான அணியின் திட்டம் மற்றும் செயல்பாடுகளை மாற்றுவதாக அமைந்துவிடும். எனவே இந்த சூழலில் பயிற்சியாளரை மாற்றுவது சரியான முடிவாக இருக்காது என்று அந்த பிசிசிஐ அதிகாரி தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.