இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் அனைவரின் பதவிக்காலமும் முடியவுள்ளதால், புதிய பயிற்சியாளர்கள் பதவிக்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி கடந்த 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவருடன் பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்காரும் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருணும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் நியமிக்கப்பட்டனர். 

இவர்களது பதவிக்காலம் உலக கோப்பையுடன் முடிந்துவிட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை கருத்தில்கொண்டு 45 நாட்கள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், புதிய பயிற்சியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், ஃபிசியோதெரபிஸ்ட், அணி நிர்வாக மேலாளர் உள்ளிட்ட 7 பொறுப்புகளுக்காக விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

ஜூலை 30ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம். பிசிசிஐ நிர்ணயித்துள்ள தகுதிகளை பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டு வீரர்களும் கூட விண்ணப்பிக்கலாம்.