ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடும் வீரர்களை ஏ+, ஏ, பி, சி ஆகிய பிரிவுகளாக பிரித்து ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிடும். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை 2 தினங்களுக்கு முன் வெளியிட்டது பிசிசிஐ.

இந்தாண்டுக்கான பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் 28 வீரர்கள் இடம்பெற்றனர். ஷுப்மன் கில், முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் முதல்முறையாக பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர்.

ஏ+ பிரிவில் உள்ள வீரர்கள் (ரூ.7 கோடி) - விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா.

ஏ பிரிவில் உள்ள வீரர்கள் (ரூ.5 கோடி) - ரவிச்சந்திரன் அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரஹானே, தவான், கேஎல் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா.

பி பிரிவில் உள்ள வீரர்கள்(ரூ.3 கோடி) - ரிதிமான் சஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், மயன்க் அகர்வால்.

சி பிரிவில் உள்ள வீரர்கள் (ரூ.1 கோடி) - குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி, அக்ஸர் படேல், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.

3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடும் மற்றும் ஐசிசி தரவரிசையில் நல்ல ரேங்க்கை பெற்றிருக்கும் வீரர், ரூ.7 கோடியை ஆண்டு ஊதியமாக கொண்ட உயர் பிரிவான ஏ+ பிரிவில் இடம்பெறும் தகுதியுடையவர் ஆவார்.  அந்தவகையில், இந்திய அணிக்காக 3 விதமான போட்டிகளிலும் ஆடும் மற்றும் ஐசிசி ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் டெஸ்ட்(3), ஒருநாள்(9) கிரிக்கெட்டில் டாப் 10க்குள் இடம்பெற்றிருக்கும் ஜடேஜா, ஏ+ பிரிவில் இடம்பெற தகுதியானவர்.

ஜடேஜாவை ரூ.7 கோடி ஆண்டு ஊதியமாக கொண்ட ஏ+ பிரிவில் சேர்ப்பது குறித்து ஆலோசித்த பிசிசிஐ, கடைசியில் அவர் ஏற்கனவே இருந்த ஏ பிரிவிலேயே(ரூ.5 கோடி) வைத்தது. ஏ+ பிரிவில் இடம்பெறுவதற்கான தகுதி இருந்தும், அதற்கான கண்டிஷன்களை பூர்த்தி செய்தும் கூட ஜடேஜா ஏ+ பிரிவில் இடம்பெறாதது குறித்த அதிருப்தியை இந்திய அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் வெளிப்படுத்தினார்.