இளம் கிரிக்கெட் வீரர்கள் வயது காரணமாக விளையாடும் வாய்ப்பை இழப்பதைத் தவிர்க்க, பிசிசிஐ ஜூனியர் பிரிவில் கூடுதல் எலும்பு சோதனையை அறிமுகப்படுத்துகிறது. எலும்பு வயதைக் கணக்கிட்டு, அடுத்த சீசனில் விளையாடும் தகுதியை முடிவு செய்யும் நடைமுறையில் மாற்றம்.

இளம் கிரிக்கெட் வீரர்கள் ஒரு வயது அதிகமாக இருக்கும் (+1 factor) காரணத்தால் ஒரு சீசனில் விளையாடும் வாய்ப்பை இழப்பதைத் தவிர்க்க, பிசிசிஐ புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளது. ஜூனியர் பிரிவில் கூடுதலாக எலும்பு சோதனையை அறிமுகப்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

தற்போதைய தகுதி நிர்ணயக் கணக்கீட்டில் +1 factor காரணமாக, சில வீரர்கள் தகுதி இழக்க நேரிடுகிறது.

TW3 முறையில் வயது கணக்கீடு:

தற்போதுள்ள நடைமுறையின்படி, ஒரு கிரிக்கெட் வீரரின் வயது TW3 முறை மூலம் தீர்மானிக்கப்படுகிறது. அந்த முறையில் வீரரின் எலும்பின் வயதைக் கணக்கிடப்படுகிறது. பின்னர் அதனுடன் "1" கூட்டப்படுகிறது. அதன்படி, அதே வயதுப் பிரிவில் அடுத்த சீசனில் விளையாடுவதற்கான தகுதி முடிவு செய்யப்படுகிறது.

இப்போது, புதுப்பிக்கப்பட்ட விதியின்படி, 16 வயதுக்குட்பட்ட (U-16) ஜூனியர் பிரிவில் உள்ள வீரர்கள், முந்தைய சீசனில் "+1 factor" காரணமாக தகுதி இழந்தால், அடுத்த சீசனில் இரண்டாவது எலும்பு சோதனையை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இது எண்கணிதக் கணக்கீடு காரணமாக எந்த வீரரும் வாய்ப்பை இழக்காமல் இருப்பதை உறுதி செய்யும் என்று பிசிசிஐ கருதுகிறது.

எலும்பு வயது (Bone Age) என்றால் என்ன?

தற்போது, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு எலும்பு வயது வரம்பு 16.5 ஆண்டுகள் என்றும், 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு 15 ஆண்டுகள் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வீரரின் எலும்பு வயது அடுத்த சீசனில் சிறுவர்களுக்கு 16.4 அல்லது அதற்கு குறைவாகவும், சிறுமிகளுக்கு 14.9 அல்லது அதற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், 2025-26 சீசனில் ஒரு U-16 வீரரின் எலும்பு சோதனை முடிவு 15.4 ஆண்டுகள் என்று காட்டினால், அடுத்த சீசனில் அவருக்கு மீண்டும் சோதனை செய்யப்படாது. மாறாக, ஒரு வருடம் எண்கணித ரீதியாகச் சேர்க்கப்பட்டு, 2026-27 சீசனில் அவரது எலும்பு வயது 16.4 ஆக இருக்கும். இதனால் அவர் அடுத்த சீசனில் போட்டியிட தகுதி பெறுவார்.

ஒரு வீரரின் எலும்பு வயது 15.5 அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், ஒரு வருடம் சேர்க்கும்போது அது 16.5 அல்லது அதற்கு அதிகமாகிறது. இது 16.4 என்ற தகுதி வரம்பை மீறிவிடுகிறது. எனவே அவர் U-16 போட்டியில் பங்கேற்க முடியாது.

இந்த எண்கணிதக் கணக்கீடு ஒரு வீரரின் உண்மையான வயதை துல்லியமாகப் பிரதிபலிக்காமல் போகலாம். ஆனால், அவர்கள் ஒரு வருடம் தகுதி இழப்பதைத் தவிர்க்கலாம்.

15 வயதுக்குட்பட்ட (U-15) சிறுமிகளைப் பொறுத்தவரை, இந்த சீசனில் ஒரு வீராங்கனையின் எலும்பு சோதனை 13.9 வயது என்று காட்டினால், அவர் அடுத்த சீசனில் 14.9 எலும்பு வயதுடன் விளையாடத் தகுதி பெறுவார். ஆனால் இந்த சீசனில் அவர் 14 அல்லது அதற்கு மேற்பட்ட வயதைக் கொண்டிருந்தால், அவர் இந்த சீசனில் பங்கேற்க முடியும். ஆனால் 14.9 என்ற வயது வரம்பு காரணமாக அடுத்த ஆண்டு பங்கேற்க முடியாது.