பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அனில் தல்பாட்டுக்கு அடுத்து ஆடிய இந்து மதத்தை சேர்ந்த வீரர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் அணியில் 2000ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2012ம் ஆண்டு கவுண்டி கிரிக்கெட்டில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக்கூறி, கனேரியாவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்தது. 

அதன்பின்னர் கனேரியா இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனார். இந்நிலையில், கனேரியா ஆடிய காலத்தில், அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை சில பாகிஸ்தான் வீரர்கள் ஒதுக்கிவைத்ததாகவும் அவருடன் அமர்ந்து சாப்பிடக்கூட மறுத்ததாகவும் அக்தர் கூறியிருந்தார். 

இதையடுத்து, அக்தர் கூறியது உண்மைதான் எனவும், தான் ஒரு இந்து என்பதற்காக தன்னிடம் பாரபட்சம் காட்டி தன்னை ஒதுக்கிய வீரர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் எனவும் தெரிவித்த கனேரியா, அக்தருக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். கனேரியாவின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆனால், தனது கேப்டன்சியில் அதிகமாக ஆடிய கனேரியா பாகுபாட்டுடன் நடத்தப்பட்டிருக்க வாய்ப்பேயில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் பாசித் அலி, தான் ஒரு இந்து என்பதால், தன்னை சில வீரர்கள் ஒதுக்கியதாக குற்றம்சாட்டிய கனேரியா, அந்த வீரர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுகிறேன் என்று கூறியது என்னை அதிர்ச்சியடைய செய்தது. அக்தருக்கு பிரபலம் தேவையில்லை. அவர் ஏற்கனவே பாகிஸ்தான் ரசிகர்களின் உள்ளங்களில் குடியிருக்கிறார். எனவே அவர் பிரபலத்திற்காக இப்படி சொல்லியிருக்க மாட்டார். ஆனால் கனேரியாவிடம் பாகுபாடு காட்டிய வீரர்களின் பெயர்களை அக்தர் கண்டிப்பாக சொல்ல வேண்டும். இதுமாதிரியான பிரிவினைகள் நான் ஆடிய காலத்தில் இல்லை என்று பாசித் அலி தெரிவித்தார். 

பாசித் அலி 1993ம் ஆண்டிலிருந்து 1996ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் ஆடியிருக்கிறார்.