Asianet News TamilAsianet News Tamil

#WIvsBAN அப்பா புண்ணியவானே நீ முதல்ல கிளம்புப்பா; வெஸ்ட் இண்டீஸ் அணியில் 2 முக்கிய மாற்றங்கள்! டாஸ் ரிப்போர்ட்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

bangladesh win toss opt to field against west indies in t20 world cup
Author
Sharjah - United Arab Emirates, First Published Oct 29, 2021, 3:29 PM IST

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று ஷார்ஜாவில் நடக்கும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த 2 அணிகளுமே சூப்பர் 12 சுற்றில் ஆடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், முதல் வெற்றியை எதிர்நோக்கி இரு அணிகளுமே களமிறங்கியுள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது. வங்கதேச அணி, இலங்கை மற்றும் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. 2 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான வெஸ்ட் இண்டீஸ் அணியின் மீது இந்த டி20 உலக கோப்பை தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் முதல் 2 போட்டிகளிலும் பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பி படுதோல்வியை சந்தித்தது.

எனவே இந்த போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெறும் வேட்கையுடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது. வங்கதேச அணியும் முதல் வெற்றியை எதிர்நோக்கி ஆடுகிறது. இந்த தொடரில் இதுவரை டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவந்த வங்கதேச அணி, ஷார்ஜாவில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்த போட்டியில் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

வங்கதேச அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நூருல் ஹசன் மற்றும் நசும் அகமது ஆகிய 2 வீரர்களும் இன்றைய போட்டியில் ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக சௌமியா சர்க்கார் மற்றும் டஸ்கின் அகமது ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வங்கதேச அணி:

சௌமியா சர்க்கார், முகமது நைம், லிட்டன் தாஸ்(விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், மஹ்மதுல்லா(கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், மஹெடி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், டஸ்கின் அகமது.

வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் படுமட்டமாக பேட்டிங் ஆடி 35 பந்தில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்து, அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான லெண்டல் சிம்மன்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மற்றொரு தொடக்க வீரரான எவின் லூயிஸ் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்திக்கொண்டிருக்க, சிம்மன்ஸோ படுமந்தமாக பேட்டிங் ஆடி, லூயிஸின் மீதான அழுத்தத்தை அதிகரித்தார். இவரும் நன்றாக ஆடவில்லை என்றாலும், ஓரளவிற்காவது ஆடியிருந்தால் கூட வெஸ்ட் இண்டீஸ் பெரிய ஸ்கோரை அடித்திருக்கும். எனவே தோல்விக்கு காரணமாக அமைந்த அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரோஸ்டான் சேஸ் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே இன்றைய போட்டியில் எவின் லூயிஸுடன் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் தொடக்க வீரராக களமிறங்குவார்.

ஹைடன் வால்ஷ் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அருமையான பவுலிங், அதிரடியான பேட்டிங் என ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸ் கொடுக்கக்கூடிய ஹோல்டரின் வருகை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கண்டிப்பாக பலம் சேர்க்கும்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ரோஸ்டான் சேஸ், நிகோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், கைரன் பொல்லார்டு(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர், ட்வைன் பிராவோ, அகீல் ஹுசைன், ரவி ராம்பால்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios