3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது வங்கதேச அணி. 

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்கதேச அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில், 3வது ஒருநாள் போட்டி கயானாவில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் நிகோலஸ் பூரனை தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. அபாரமாக பேட்டிங் ஆடிய பூரன் அரைசதம் அடித்தார்.

இதையும் படிங்க - அந்த ஷாட்டை மொத்தமாவே தடை செய்யணும்..! அஷ்வின் கருத்துக்கு வலுசேர்க்கும் ஸ்காட் ஸ்டைரிஸ்

பூரனுக்கு மறுமுனையில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. கீஸி கார்ட்டி 33 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் அந்தளவிற்கு கூட ஆடவில்லை. சிறப்பாக ஆடிய நிகோலஸ் பூரன் 73 ரன்கள் அடித்தார். வேறு யாரும் சரியாக ஆடாததால் 48.4 ஓவரில் வெறும் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இதையும் படிங்க - கோலி ஃபார்ம் பற்றி கேட்ட நிருபர்.. கடுப்பான ரோஹித்..! வைரல் வீடியோ

179 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணி அந்த இலக்கையே கஷ்டப்பட்டுத்தான் அடித்தது. தொடக்க வீரர் தமீம் இக்பால் 34 ரன்கள் அடித்தார். லிட்டன் தாஸ் அரைசதம் அடித்தார். ஆனால் சரியாக 50 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். சீனியர் வீரர் மஹ்மதுல்லா மந்தமாக பேட்டிங் ஆடி 61 பந்தில் 26 ரன்கள் மட்டுமே அடித்தார். இலக்கு எளிதானது என்பதால் அவரது ஸ்லோ இன்னிங்ஸ் வங்கதேசத்தின் வெற்றியை பாதிக்கவில்லை. 49வது ஓவரில் இலக்கை அடித்து வெற்றி பெற்ற வங்கதேச அணி, 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.