தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிந்து, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகள் முடிந்துவிட்டன. கடைசி போட்டி நாளை ராஞ்சியில் தொடங்கவுள்ளது. 

தென்னாப்பிரிக்க தொடர் முடிந்ததும், வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான 15 வீரர்களை கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியில் சீனியர் வீரர்களான முஷ்ஃபிகுர் ரஹீம், மஹ்மதுல்லா, தமீம் இக்பால், லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார் ஆகியோர் உள்ளனர். மேலும் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் அணியில் உள்ளார். ஃபாஸ்ட் பவுலர் அல் அமீன் ஹுசைன் மீண்டும் வங்கதேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2016ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஆடியதுதான் அல் அமீன் கடைசியாக ஆடிய போட்டி. 

அதன்பின்னர் 3 ஆண்டுகள் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியில் மீண்டும் அல் அமீனுக்கு இடம் கிடைத்துள்ளது. 

வங்கதேச அணி;

ஷகிப் அல் ஹசன்(கேப்டன்), தமீம் இக்பால், லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், முகமது நைம், முஷ்ஃபிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மொசாடெக் ஹுசைன், அமினுல் இஸ்லாம், அராஃபட் சன்னி, முகமது சைஃபுதின், அல் அமீன் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்,ஷாஃபியுல் இஸ்லாம்.