Asianet News TamilAsianet News Tamil

New Zealand vs Bangladesh: 328 ரன்களுக்கு சுருண்ட நியூசுலாந்து..! வங்கதேச அணி சூப்பர் பேட்டிங்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேச அணி, அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறது.
 

bangladesh batting well against new zealand in first test
Author
Mount Maunganui, First Published Jan 2, 2022, 2:50 PM IST

வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டாம் லேதம் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் டாம் லேதம் 52 ரன்கள் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய டெவான் கான்வே அபாரமாக ஆடி சதமடித்தார். கான்வே 122 ரன்கள் அடித்தார். சீனியர் வீரரான ரோஸ் டெய்லர் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்திருந்தது.

2ம் நாள் ஆட்டத்தில் ஹென்ரி நிகோல்ஸுடன் ராச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். ரவீந்திரா  4 ரன்களுக்கு ஆட்டமிழக்க,  கைல் ஜாமிசன் மற்றும் சௌதி ஆகிய இருவரும்  6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வாக்னர் டக் அவுட்டானார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் நிகோல்ஸ் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். 75 ரன்கள் அடித்திருந்த நிகோல்ஸ் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, 328 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து அணி. முதல் நாள் ஆட்டத்தில் 88 ஓவர்கள் பேட்டிங் ஆடியிருந்த நியூசிலாந்து அணி, 2ம் நாள் ஆட்டத்தில் அடுத்த 19 ஓவரில் ஆல் அவுட்டாகினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி வீரர்கள் அபாரமாக ஆடிவருகின்றனர். தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் 21 ரன்கள் மட்டுமே அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான மஹ்மதுல் ஹசன் ராயுடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ சிறப்பாக பேட்டிங் ஆடினார். இருவருமே அரைசதம் அடிக்க, 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 104 ரன்களை குவித்தனர்.

நஜ்முல் 64 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மஹ்முதுல் 70 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிந்தது. 2ம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios