இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராயை இன்னிங்ஸின் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாக்கி அனுப்பிய மிட்செல் ஸ்டார்க், அதற்கடுத்த பந்திலேயே ஜோ ரூட்டையும் வீழ்த்தினார். ராய் மற்றும் ரூட் ஆகிய இருவருமே கோல்டன் டக் அவுட்டானதால், ரன் கணக்கையே தொடங்காமல் 2 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.

அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் மோர்கனும் 23 ரன்களில் ஆடம் ஸாம்பாவின் சுழலில் வீழ்ந்தார். அவரைத்தொடர்ந்து ஜோஸ் பட்லரும் 8 ரன்களில் ஸாம்பாவின் சுழலில் அவுட்டாக, இங்கிலாந்து அணி 18.1 ஓவரில் 96 ரன்களுக்கே முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ஜானி பேர்ஸ்டோவுடன் சாம் பில்லிங்ஸ் ஜோடி சேர்ந்தார். பேர்ஸ்டோ அடித்து ஆடி சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்த, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பில்லிங்ஸ் மறுமுனையில் நன்றாக ஆட, பார்ட்னர்ஷிப் பில்ட் ஆனது. அயர்லாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் சொதப்பிய பேர்ஸ்டோ, நடப்பு தொடரில் இழந்த ஃபார்மை மீட்டு சிறப்பாக ஆடிவரும் நிலையில், இந்த போட்டியில் சதமடித்தார்.

இங்கிலாந்து அணி இக்கட்டான நிலையில் இருந்த நேரத்தில் ஆடப்பட்ட முக்கியமான இன்னிங்ஸ் இது. ஜானி பேர்ஸ்டோ சதமடிக்க, பில்லிங்ஸும் அரைசதம் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 19 ஓவரில் 114 ரன்களை சேர்த்தனர். பில்லிங்ஸ் 58 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

களத்தில் நங்கூரமிட்டு சதமடித்த பேர்ஸ்டோவுடன் கிறிஸ் வோக்ஸ் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இங்கிலாந்து அணியை பேர்ஸ்டோவும் பில்லிங்ஸும் சேர்ந்து சரிவிலிருந்து மீட்டதையடுத்து, நல்ல ஸ்கோரை நோக்கி இங்கிலாந்து ஆடிக்கொண்டிருக்கிறது. செட்டில் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ களத்தில் நிற்பதால் 300 ரன்களுக்கு இங்கிலாந்து குவித்துவிடும் என்று நம்பலாம்.