கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாத நிலையில், கிரிக்கெட் வீரர்கள் ஆல்டைம் லெவன், சமகால பெஸ்ட் லெவன், சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், ஃபீல்டர்கள் ஆகியோரை தேர்வு செய்துவருகின்றனர்.

அந்தவகையில், பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பாபர் அசாம், இந்தியா - பாகிஸ்தான் ஒருங்கிணைந்த டி20 அணியை தேர்வு செய்துள்ளார். 

தனது டி20 அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவை தேர்வு செய்த பாபர் அசாம், ரோஹித்தின் தொடக்க ஜோடியாக தன்னையே தேர்வு செய்துள்ளார். மூன்றாம் வரிசையில் விராட் கோலியையும் நான்காம் வரிசைக்கு பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரரான ஷோயப் மாலிக்கையும் ஐந்தாம் வரிசை வீரர் மற்றும் விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ளார்.

ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஷதாப் கான் ஆகிய இருவரையும் ஸ்பின்னராக குல்தீப் யாதவையும் ஃபாஸ்ட் பவுலர்களாக, பாகிஸ்தானின் சீனியர் பவுலர் முகமது ஆமீரையும், ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் பும்ரா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார் பாபர் அசாம்.

பாபர் அசாம் தேர்வு செய்த இந்தியா - பாகிஸ்தான் ஒருங்கிணைந்த டி20 லெவன்: 

ரோஹித் சர்மா, பாபர் அசாம், விராட் கோலி, ஷோயப் மாலிக், தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷதாப் கான், முகமது ஆமீர், குல்தீப் யாதவ், ஷாஹீன் அஃப்ரிடி, பும்ரா.

பாபர் அசாம் தேர்வு செய்த இந்தியா - பாகிஸ்தான் டி20 அணியில், 6 இந்திய வீரர்களையும் 5 பாகிஸ்தான் வீரர்களையும் தேர்வு செய்துள்ளார் பாபர் அசாம்.