வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விக்கெட் கீப்பிங் க்ளௌஸ் போட்டு ஃபீல்டிங் செய்ததால், எதிரணியான வெஸ்ட் இண்டீஸுக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது ஒருநாள் போட்டி முல்தானில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, பாபர் அசாம் (77) மற்றும் இமாம் உல் ஹக்கின் (72) பொறுப்பான பேட்டிங்கால் 50 ஓவரில் 275 ரன்கள் அடித்தது.
276 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 32.2 ஓவரில் வெறும் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது நவாஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கின்போது, முகமது நவாஸ் வீசிய 29வது ஓவரின் முதல் பந்தை அல்ஸாரி ஜோசஃப் எதிர்கொண்டு ஆடினார். அந்த பந்தை ஃபீல்டிங் செய்த பாபர் அசாம் கையில் விக்கெட் கீப்பிங் க்ளௌஸ் அணிந்திருந்தார். ஐசிசி விதிப்படி, ஃபீல்டர்கள் யாரும் விக்கெட் கீப்பிங் க்ளௌஸ் அல்லது கால்காப்பு அணியக்கூடாது. விதி 28.1-ஐ பாபர் அசாம் மீறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த 5 ரன்கள் ஆட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
